சிதம்பரம், நடராஜர் கோவிலில் பக்தரிடம் ரூ.3 லட்சம் நகை திருட்டு - மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு
சிதம்பரம் நடராஜர் கோவிலில் பக்தரிடம் ரூ.3 லட்சம் நகையை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சிதம்பரம்,
காஞ்சிபுரம் மாவட்டம் மாடம்பாக்கம் ஜனந்தா நகர் 5-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் பிரித்திவி ராஜ். இவரது மனைவி கமலம்(வயது 57). இவர் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு தனது குடும்பத்தினருடன் வந்தார். அங்கு சாமி தரிசனம் செய்து முடித்துவிட்டு, சிதம்பரத்தில் இருந்து காரைக்காலுக்கு காரில் சென்றனர்.
சிறிது தூரம் சென்ற போது நடராஜர் கோவில் தீட்சிதர் ஒருவர் கமலத்தின் செல்போன் எண்ணுக்கு போன் செய்தார். அதில் நீங்கள் நகை பெட்டி எடுத்து வந்தீர்களா, கோவிலில் ஒரு பெட்டி கிடந்ததாக ஒருவர் எடுத்து வந்து ஒப்படைத்து சென்றதாக கூறினார். இதையடுத்து தனது நகையை பெட்டியை கமலம் தேடி பார்த்த போது காரில் இல்லை. பின்னர் தீட்சிதரிடம் இது பற்றி தெரிவித்தார்.
மீண்டும் நடராஜர் கோவிலுக்கு வந்த கமலம், அங்கு தனது நகை பெட்டியை வாங்கி பார்த்தார். அப்போது, அதில் இருந்த 3 பவுன் நெக்லஸ், 9 பவுன் செயின் ஆகியவற்றை காணவில்லை. மாறாக ஒரு நெக்லஸ் மற்றும் செயின் மட்டுமே இருந்தது. இதுகுறித்து கமலம் சிதம்பரம் நகர போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றார்.
கோவிலில் கமலம் தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்த போது, அவரிடம் இருந்து நகை பெட்டியை அபேஸ் செய்த மர்ம மனிதர்கள் அதில் இருந்த நகைகளில் 12 பவுன் நகையை மட்டும் திருடி சென்று இருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ. 3 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Related Tags :
Next Story