திருப்பூர் மாவட்டத்தில் குளங்களை சீரமைக்கும் பணிக்காக தனி அலுவலகம் கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தகவல்


திருப்பூர் மாவட்டத்தில் குளங்களை சீரமைக்கும் பணிக்காக தனி அலுவலகம் கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தகவல்
x
தினத்தந்தி 21 Aug 2019 10:15 PM GMT (Updated: 21 Aug 2019 2:05 PM GMT)

திருப்பூர் மாவட்டத்தில் குளங்களை சீரமைக்கும் பணிக்காக தனி அலுவலகம் கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கப்பட உள்ளதாக கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி கூறினார்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள நீர் நிலைகள் சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டு அவை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திருப்பூர் வஞ்சிபாளையம் ரோடு காவிலிபாளையம் பகுதியில் உள்ள நீர் நிலைகளில் குடிமராமத்து பணிகள் நேற்று தொடங்கியது. திருப்பூர் வடக்கு தொகுதி கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கி குடிமராமத்து பணிகளை தொடங்கி வைத்து பேசியதாவது:–

 காவிலிபாளையத்தில், சோளிபாளையம் முதல் காவிலிபாளையம் வரை சுமார் 1.20 கிலோ மீட்டர் தூரத்திற்கும், காவிலிபாளையம் முதல் காவிலிபாளையம் புதூர் வரை சுமார் 1.50 கிலோ மீட்டர் தூரம் என மொத்தம் சுமார் 2.70 கிலோ மீட்டார் தொலைவிற்கு புதர் மண்டிகிடக்கும் நீர் வழித்தடங்களை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்த பணியில் திருப்பூர் மக்கள் நல அறக்கட்டளை, முயற்சி மக்கள் அமைப்பு, வனத்துக்குள் திருப்பூர், ஸ்ரீபுரம் அறக்கட்டளை, காவிலிபாளையம் ஊர் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மாவட்டத்தில் உள்ள குளம், குட்டைகளை சீரமைக்கும் பணிக்காக முன்வரும் தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்களுக்காக கலெக்டர் அலுவலகத்தில் தனியாக ஒரு அலுவலகம் விரைவில் தொடங்கப்படும். இதன் மூலம் நீர்நிலைகள் விரைவில் தூர்வாரவும், சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story