கூடலூர் அருகே, வைரவன் வாய்க்கால் பாலத்தில் தடுப்பு கம்பிகள் அமைக்கப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு


கூடலூர் அருகே, வைரவன் வாய்க்கால் பாலத்தில் தடுப்பு கம்பிகள் அமைக்கப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 22 Aug 2019 4:15 AM IST (Updated: 21 Aug 2019 11:23 PM IST)
t-max-icont-min-icon

கூடலூர் அருகே உள்ள வைரவன் வாய்க்கால் பாலத்தில் தடுப்பு கம்பிகள் அமைக்கப்படுமா என்று விவசாயிகள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

கூடலூர்,

கூடலூரில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் கழுதைமேடு புலம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் விவசாயிகள் நிலக்கடலை, எள், தட்டைப்பயிறு, அவரை, மொச்சை உள்பட பல்வேறு பயிர் களை மானாவாரியாக சாகுபடி செய்து வருகின்றனர். இவர்கள் கூடலூரில் இருந்து லோயர்கேம்ப் புதுரோடு பகுதிவரை அரசு மற்றும் தனியார் பஸ்களில் வருகின்றனர்.

பின்னர் அங்கிருந்து முல்லைப்பெரியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள வைரவன் வாய்க்கால் பாலம் வழியாக தங்கள் விளைநிலங்களுக்கு நடந்து செல்வார்கள். அங்கு விவசாயப் பணிகள் முடிந்த நிலையில் மீண்டும் அந்த தரைப்பாலம் வழியாகவே நடந்து வந்து பஸ் நிறுத்தத்துக்கு செல்கின்றனர். இந்த வைரவன் வாய்க்கால் பாலம் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. அதன் பிறகு உரிய பராமரிப்பு இல்லாத நிலையில் பாலத்தில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு கம்பிகள் சேதமடைந்து விழுந்து விட்டன. தற்போது தடுப்பு கம்பிகள் இல்லாமல் தரைப்பாலம் உள்ளது.

ஆனால் பொதுப்பணித்துறையினர் அதனை சீரமைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளைச்சல் அடைந்த பொருட்களை மிகுந்த அச்சத்துடன் கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

எனவே வைரவன் வாய்க்கால் பாலத்தில் தடுப்பு கம்பிகள் அமைக்க பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story