இணையதளம் மூலம் பிறப்பு, இறப்பு சான்றிதழை இலவசமாக பெறலாம் - கலெக்டர் தகவல்
பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை இணையதளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டதாவது:-
தேனி,
தமிழகம் முழுவதும், கடந்த ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் அனைத்து பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகள் ஒரே மென்பொருளில் பதியப்பட்டு வருகிறது. பிறப்பு சான்றிதழ் குழந்தையின் முதல் உரிமையாகும். எனவே, பிரசவத்துக்கு கர்ப்பிணிகள் மருத்துவமனைக்கு செல்லும் போது, கிராம மற்றும் நகர சுகாதார செவிலியரிடம் பதிவு செய்து பெற்ற பிரத்யேக 12 இலக்க பேறுசார் மற்றும் குழந்தை நல அடையாள எண், ஆதார் எண் மற்றும் ரேஷன் கார்டு நகல் ஆகிய விவரங்களை அளித்திட வேண்டும்.
அனைத்து தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கும் பிறப்பு, இறப்பு நிகழ்வு குறித்த தகவல்கள் அளித்திட ஒவ்வொரு மருத்துவமனைக்கும் தனிப்பட்ட பயனர் கணக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் தகவல் சம்பந்தப்பட்ட பிறப்பு, இறப்பு பதிவாளர்களுக்கு அனுப்பப்பட்டு அவை சரிபார்க்கப்பட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.
மேலும் அரசு மருத்துவமனையில் நிகழக்கூடிய பிரசவங்களுக்கு அக்குழந்தையின் தாய் மருத்துவமனையை விட்டுச் செல்லும் முன் பிறப்பு சான்றிதழ் வழங்கிட, அம்மருத்துவமனை வளாகத்திலேயே அமைந்துள்ள மையங்களில் பிறப்பு, இறப்பு பதிவாளர் இணையதளம் மூலம் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. வீடுகளில் நிகழும் பிறப்பு மற்றும் இறப்புகள் குறித்த தகவல்களை அப்பகுதிக்கு உட்பட்ட பிறப்பு, இறப்பு பதிவாளரிடம் அளித்து பதிவு மேற்கொள்ள வேண்டும்.
அத்துடன் இலவசமாக இணையதளம் மூலமாக பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் பெறும் நடைமுறையும் அமல்படுத்தப்பட்டு உள்ளது. http://crstn.org/bi-rth_de-ath_tn என்ற இணையதளத்தில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு பதிவிறக்கம் செய்யப்படும் சான்றிதழில் ‘கியூ ஆர்’ குறியீடு இடம் பெற்றுள்ளது. இது, சான்றிதழில் நம்பகத்தன்மையை உறுதி செய்ய வழிவகை செய்கிறது.
பொதுமக்கள் இணையதளம் மூலம் கட்டணமின்றி எத்தனை பிரதிகள் வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஆண்டு ஜனவரி 1-ந்தேதிக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட விவரங்களை இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே, மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை இணையதளத்தின் வாயிலாக பதிவிறக்கம் செய்து பயனடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story