ஆண்டிப்பட்டி அருகே, குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல் - 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு


ஆண்டிப்பட்டி அருகே, குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல் - 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 21 Aug 2019 10:30 PM GMT (Updated: 21 Aug 2019 5:53 PM GMT)

ஆண்டிப்பட்டி அருகே உள்ள தர்மத்துபட்டி கிராமத்தில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆண்டிப்பட்டி,

ஆண்டிப்பட்டி அருகே புள்ளிமான்கோம்பை ஊராட்சிக்கு உட்பட்ட தர்மத்துபட்டி கிராமத்தில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு ஆண்டிப்பட்டி-சேடப்பட்டி குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த கிராமத்திற்கு செல்லும் தண்ணீரை தி.அணைக்கரைப்பட்டி கிராமத்தை சேர்ந்த சிலர் குழாயில் ‘கேட்வால்வு’ பொருத்தி நிறுத்திவிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் தர்மத்துபட்டி கிராமத்திற்கு கடந்த 6 மாதத்திற்கும் மேலாக குடிநீர் வழங்கவில்லை. அந்த கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. அங்கு ஆழ்துளை கிணறு மூலம் வினியோகம் செய்யப்படும் தண்ணீரையே குடிநீர் உள்பட அனைத்து தேவைகளுக்கும் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் குடிநீருக்காக அருகில் உள்ள கிராமங்களுக்கும், 10 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஆண்டிப்பட்டி பேரூராட்சி அலுவலகத்திற்கும் சென்று எடுத்து வரவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தர்மத்துபட்டி கிராமத்தில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்கும்படி இப்பகுதி மக்கள் பலமுறை சம்பந்தபட்ட அரசு அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த தர்மத்துபட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் ஆண்டிப்பட்டி-வத்தலக்குண்டு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஆண்டிப்பட்டி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் போலீசார் விரைந்து வந்து மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வரை மறியலை கைவிடமாட்டோம் என்று பொதுமக்கள் கூறினர்.

இதை தொடர்ந்து தர்மத்துபட்டிக்கு 7 நாட்களுக்குள் சீராக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து மறியலை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர்.

இந்த மறியல் போராட்டத்தால் ஆண்டிப்பட்டி-வத்தலக்குண்டு சாலையில் சுமார் 3 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story