ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நோயாளிகளை சந்திக்க வரும் பார்வையாளர்களுக்கு புதிய கட்டுப்பாடு; தொடர் திருட்டு சம்பவத்தால் அதிரடி


ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நோயாளிகளை சந்திக்க வரும் பார்வையாளர்களுக்கு புதிய கட்டுப்பாடு; தொடர் திருட்டு சம்பவத்தால் அதிரடி
x
தினத்தந்தி 22 Aug 2019 5:00 AM IST (Updated: 22 Aug 2019 12:25 AM IST)
t-max-icont-min-icon

தொடர் திருட்டு நடைபெறுவதாக புகார்கள் எழுந்ததால், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நோயாளிகளை சந்திக்க வரும் பார்வையாளர்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் தினமும் ஆயிரக்கணக்கானோர் உள் நோயாளிகளாகவும், வெளி நோயாளிகளாகவும் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். வெளிமாநிலம், வெளிமாவட்டங்களில் இருந்தும் கூட அங்கு சிகிச்சைக்காக வருகின்றனர். உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுபவர்களின் உறவினர்கள் சிகிச்சை முடியும் வரை மருத்துவமனையில் தங்கியிருந்து அவர்களின் உடல் நலத்தை கவனித்து வருகின்றனர். நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களின் உடைமைகள், செல்போன்கள், பணம் மற்றும் நகைகள் அடிக்கடி திருடு போவதாக புகார்கள் வந்தன.

இந்த நிலையில் இதுபோன்ற திருட்டு சம்பவங்களை தடுக்க மருத்துவமனை நிர்வாகம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி நோயாளிகளுடன் வரும் உறவினர்களுக்கு உதவியாளர் அட்டை அடங்கிய ‘டேக்’ வழங்கப்பட்டு வருகிறது. இதனை அணிந்திருப்பவர்கள் மட்டுமே வார்டுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். நோயாளிகளுடன் வரும் உறவினர்கள் ஒருவருக்கு மட்டுமே இந்த உதவியாளர் அட்டை வழங்கப்படுகிறது.

இது குறித்து மருத்துவமனை டீன் டாக்டர் ஜெயந்தி கூறியதாவது:-

இந்த மருத்துவமனையில் 3,500 நோயாளிகள் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். அவர்களுடன் அவரது உறவினர்கள் அல்லது நண்பர்கள் சிகிச்சை முடியும் வரை உடன் மருத்துவமனையிலே தங்கி இருக்கின்றனர். வெளியே சுற்றித்திரியும் மர்ம நபர்கள் சிலர் இரவில் மருத்துவமனையில் நோயாளிகளின் உறவினர்கள் போல தங்கி சென்று வந்தனர். முன்பு நோயாளிகளை சந்திக்க 2-க்கும் மேற்பட்ட நபர்களை அனுமதித்தோம்.

தற்போது நோய் தொற்று பரவாமல் தடுப்பதற்கும், மருத்துவமனை வளாகத்தை தூய்மையாக வைத்துக்கொள்ளவும், சில குற்ற சம்பவங்கள் நடப்பதை தடுக்கவும் புது கட்டுப்பாடுகளை பார்வையாளர்களுக்கு விதித்துள்ளோம்.

அதன்படி நோயாளியை மருத்துவமனையில் அனுமதிக்கும்போதே, உடன் வருபவர்களுக்கு ‘டேக்’ உடன் கூடிய உதவியாளர் அடையாள அட்டை எவ்வித கட்டணமும் இன்றி வழங்கப்படும். நோயாளியுடன் தங்கியிருக்க அல்லது அவரை சந்திக்க அடையாள அட்டை அணிந்திருப்பவர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்.

மாலை 7 மணிக்கு ஒவ்வொரு வார்டிலும் அறிவிப்பு மணி அடிக்கப்படும். அப்பொழுது அடையாள அட்டை அணிந்திருப்பவர்களை தவிர மற்றவர்கள் வெளியேற்றப்படுவார்கள். யாருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த நடைமுறை கடந்த மாதத்தில் இருந்து அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டால் தற்போது 70 சதவீதம் நோய் தொற்று மற்றும் குற்ற சம்பவங்கள் தடுக்கப்பட்டு உள்ளன. இனி வரும் காலங்களிலும் இது நடைமுறையில் இருக்கும். இதனால் நோயாளிகள் அல்லாதவர்கள் மருத்துவமனையில் இரவு நேரங்களில் அனுமதிக்கப்படுவது தடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story