திருச்சியில் வாழை சார்ந்த தொழில் உற்பத்தி பயிற்சி மையம் தொடங்கப்படும்


திருச்சியில் வாழை சார்ந்த தொழில் உற்பத்தி பயிற்சி மையம் தொடங்கப்படும்
x
தினத்தந்தி 21 Aug 2019 11:00 PM GMT (Updated: 21 Aug 2019 7:14 PM GMT)

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் விரைவில் வாழை சார்ந்த தொழில் உற்பத்தி பயிற்சி மையம் தொடங்கப்படும் என்று இயக்குனர் உமா கூறினார்.

திருச்சி,

திருச்சியை அடுத்த தாயனூரில் தேசிய வாழை ஆராய்ச்சி மையம் இயங்கி வருகிறது. இந்த மையம் தொடங்கப்பட்டு 26 ஆண்டுகள் நிறைவு பெற்று இருப்பதையொட்டி நிறுவன நாள் விழா மற்றும் வாழை விவசாயிகள் தினவிழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு வாழை ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் உமா தலைமை தாங்கினார்.

திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ். சிவராசு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தும், நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி வாழை உற்பத்தியில் சாதனை படைத்த விவசாயிகளுக்கு விருதுகள் வழங்கியும் பேசினார்.

அவர் பேசும்போது, ‘பொறியியல் பட்டதாரிகள் கூட தற்போது நவீன முறையில் விவசாயம் செய்யும் தொழிலுக்கு தங்களை மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். மத்திய, மாநில அரசுகள் விவசாயத்திற்காக மானியத்துடன் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றன. அவற்றை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ரசாயன உரங்களின் பயன்பாட்டை முடிந்த வரையில் குறைத்து இயற்கை உரங்களை இடுபொருட்களாக பயன்படுத்தவேண்டும். நமது முன்னோர்கள் வளமான நிலத்தையும், நல்ல தண்ணீரையும் நமக்கு விட்டு சென்றிருக்கிறார்கள். அதனை அப்படியே அடுத்த தலைமுறையினருக்கு விட்டு செல்ல வேண்டுமானால் ரசாயன உர பயன்பாட்டை குறைக்கவேண்டும்’ என்றார்.

மையத்தின் இயக்குனர் உமா பேசியதாவது:-

‘திசு கல்ச்சர்’ வாழை

வருமானத்தை இரட்டிப்பாக்கினால் தான் விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் உயரும் என்பதால் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதற்கு தொழில்நுட்ப உதவிகளை இம்மையம் வழங்கி வருகிறது. குறைந்த செலவில் நிறைந்த மகசூலை பெறுவது தான் புத்திசாலித்தனம். இதற்காக ‘திசு கல்ச்சர்’ வாழைகளை விவசாயிகளுக்கு வழங்கி வருகிறோம்.

வைரஸ் நோய் தாக்குதல் இல்லாத வாழைக்கன்றுகளை கண்டுபிடிக்கும் ‘ஸ்டிப்’ போன்ற கருவி 40 ரூபாய்க்கு விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது. தற்போது பவுடர் வடிவில் கிடைக்கும் ‘பனானா சக்தி’ விரைவில் திரவ வடிவில் வழங்கப்பட உள்ளது. தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் மூலம் ஏற்கனவே வெளியிடப்பட்ட காவேரி கல்பதரு, சுகந்தம், காவேரி சபா ஆகிய ‘திசு கல்ச்சர்’ வாழை ரகங்கள் விவசாயிகளிடம் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது.

உற்பத்தி பயிற்சி மையம்

வாழைக்காய், வாழைப்பழத்தில் இருந்து பல்வேறு மதிப்பு கூட்டும் பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. வாழைத்தாரை வெட்டிய பின்னரும் அதன் இலை, நார்கள், தண்டு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த பொருட்களுக்கு மதிப்பு கூட்டல் முறையில் விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.

வாழை சார்ந்த பொருட்களுக்கான தொழில் உற்பத்தி பயிற்சி மையம் (இன்குபேஷன் சென்டர்) விரைவில் திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் தொடங்கப்படும். இதன் மூலம் விவசாயிகளும், தொழில் முனைவோர்களும் மிகுந்த பயன் அடைய முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விவசாயிகள் கோரிக்கை

தொடர்ந்து தமிழக அரசின் முதன்மை வன பாதுகாவலர் மஞ்சுநாதா, வேளாண்மை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முருகேச பூபதி, திருச்சி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சந்தான கிருஷ்ணன், தோட்டக்கலைத் துறை துணை இயக்குனர் விமலா, கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் எஸ்தர் ஷீலா, விஞ்ஞானி குமார் ஆகியோரும் பேசினார்கள்.

மேலும் விலை வீழ்ச்சியால் வாழை விவசாயிகள் பாதிக்கப்படுவதால் வாழைத்தார் உள்ளிட்ட வாழை சார்ந்த பொருட்களுக்கு நல்ல சந்தை மதிப்பை உருவாக்கி தர வேண்டும் என்று வாழை விவசாயிகள் புலியூர் நாகராஜன், அஜித்தன் ஆகியோர் கோரிக்கை விடுத்து பேசினார்கள்.

கண்காட்சி

தொடக்கத்தில் முதன்மை விஞ்ஞானி பத்மநாபன் வரவேற்றார். முடிவில் முனைவர் தங்கவேலு நன்றி கூறினார். இந்த விழாவில் வாழையில் இருந்து தயாரிக்கப்பட்ட பல்வேறு பொருட்களின் கண்காட்சி அமைக்கப்பட்டு இருந்தது. கண்காட்சியில் உதயம் ரகத்தை சேர்ந்த பிரமாண்ட வாழைத்தார் இடம்பெற்றிருந்தது. ஆளுயரத்துக்கும் மேலாக இருந்த அந்த வாழைத்தாரை விவசாயிகள், பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்தனர்.

கண்காட்சியை பார்வையிட்ட வாழை விவசாயிகளுக்கு பல்வேறு தொழில் நுட்ப ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

Next Story