முதுமலை வனப்பகுதியில், காட்டுயானையை சீண்டும் செந்நாய் கூட்டம் - சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ


முதுமலை வனப்பகுதியில், காட்டுயானையை சீண்டும் செந்நாய் கூட்டம் - சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ
x
தினத்தந்தி 21 Aug 2019 10:00 PM GMT (Updated: 21 Aug 2019 7:17 PM GMT)

முதுமலை வனப்பகுதியில் காட்டுயானையை செந்நாய் கூட்டம் சீண்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மசினகுடி,

நீலகிரி மாவட்டத்தில் முதுமலை புலிகள் காப்பகம் உள்ளது. இங்குள்ள வனப்பகுதியில் காட்டுயானைகள், காட்டெருமைகள், மான்கள், புலிகள், சிறுத்தைப்புலிகள், செந்நாய்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. மேலும் அரிய வகை தாவரங்களையும், மரங்களையும் கொண்டு இயற்கை எழில் சூழ முதுமலை புலிகள் காப்பகம் அமைந்து உள்ளது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் முக்கியமானதாக அது விளங்குகிறது.

எனவே முதுமலை புலிகள் காப்பகத்தை காண சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். சராசரியாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என ஆண்டுக்கு 1 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் வனப்பகுதியையும், வனவிலங்குகளையும் கண்டு ரசிக்கும் வகையில் வனத்துறை சார்பில் யானை சவாரி மற்றும் வாகன சவாரியில் அழைத்து செல்லப்படுகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு வழக்கம்போல் சுற்றுலா பயணிகள் வாகன சவாரி சென்றனர். அப்போது அவர்கள் செந்நாய் கூட்டத்தை காட்டுயானை விரட்டியடிப்பதை கண்டு ரசித்தனர். மேலும் அதனை தங்களது செல்போனில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், காட்டுயானையை செந்நாய்கள் சுற்றி வளைத்து சீண்டுகின்றன. உடனே ஆத்திரமடைந்த காட்டுயானை செந்நாய்களை அங்கும், இங்குமாக துரத்துகிறது. எனினும் அஞ்சாத செந்நாய்கள் மீண்டும் காட்டுயானையை தொந்தரவு செய்கின்றன. சிறிது நேரம் கழித்து செந்நாய்களிடம் இருந்து காட்டுயானைகள் விலகி சென்றுவிடுகிறது. இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறியதாவது:-

முதுமலை புலிகள் காப்பகத்துக்கு வாகன சவாரி செல்லும்போது, ஆங்காங்கே வனவிலங்குகளை காண முடியும். ஆனால் அவை வேட்டையாடுவது, விளையாடுவது போன்றவைகளை காண்பது அரிது. இதுபோன்ற சம்பவங்கள் எப்போதாவது தான் நிகழும். அதை நாங்கள் ரசித்தது அதிர்ஷ்டம் தான். வனப்பகுதியில் வாழும் பெரிய விலங்கான காட்டுயானையை, செந்நாய் கூட்டம் திணறடித்தது. இதன் மூலம் யாராக இருந்தாலும் ஒற்றுமையோடு வாழ்ந்தால் நிச்சயம் எதையும் சாதிக்கலாம் என்பதை புரிந்து கொண்டோம். தற்போது மழை பெய்து ஓய்ந்து உள்ளதால், பசுமைக்கு திரும்பி உள்ள வனப்பகுதியின் இயற்கை எழில் கூடி உள்ளது. அதை காண்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story