அரசு பள்ளிகளை தக்க வைக்க பெற்றோர்கள் தீவிர முயற்சி தொடரும் உதவிகளால் மாணவர்கள் மகிழ்ச்சி


அரசு பள்ளிகளை தக்க வைக்க பெற்றோர்கள் தீவிர முயற்சி தொடரும் உதவிகளால் மாணவர்கள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 22 Aug 2019 4:15 AM IST (Updated: 22 Aug 2019 1:46 AM IST)
t-max-icont-min-icon

கறம்பக்குடி பகுதியில் அரசு பள்ளிகளை தக்கவைக்க பெற்றோர்கள் தீவிர முயற்சி செய்து வருகின்றனர். சமூக நல அமைப்பினரின் உதவிகளால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கறம்பக்குடி,

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை விகிதம் ஆண்டுக்கு ஆண்டு குறைந்து கொண்டே வருகிறது. குறிப்பாக அரசு தொடக்கப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை பெரும் சரிவை சந்தித்து உள்ளது. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகளை அரசு அறிவித்துள்ளது. இருப்பினும் தனியார் பள்ளிகளின் விளம்பரயுக்தி, சமூக அந்தஸ்து, போட்டி தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை போன்றவற்றால் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கவே சில பெற்றோர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

இந்நிலையில் தமிழ்நாட்டில் அரசு தொடக்கப்பள்ளிகளில் 10 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளை மூடிவிட்டு அருகில் உள்ள பள்ளிகளுடன் இணைக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பல ஆண்டுகளாக தங்கள் ஊரில் செயல்பட்டு வரும் பள்ளிகள் மூட படாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

நலத்திட்ட உதவிகள்

இதன்படி புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகளில் சமூக நல அமைப்புகளின் உதவியுடன் பள்ளிகளுக்கும், மாணவர்களுக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக அரசு பள்ளி மாணவர்கள் வலம் வருவதை பார்த்து பலரும் ஆச்சரியப்படுகின்றனர். இதன்மூலம் தங்கள் குழந்தைகளையும் அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ளது.

கறம்பக்குடி அனுமார் கோவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு சமூக நல அமைப்பினர் சார்பில், விளையாட்டு சீருடை, பள்ளிக்கு தொலைக்காட்சி பெட்டி உள்ளிட்டவை வழங்கப்பட்டன. இதேபோல் கறம்பக்குடி ஒன்றியத்தில் உள்ள தொடக்கப்பள்ளிகளுக்கு சமூக நல அமைப்புகள், பெற்றோர்கள் சார்பில், பல்வேறு நலத்திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு பொதுமக்கள் பலரும் வரவேற்பு தெரிவித்தனர். மாணவர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story