கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
கோவில்பட்டி,
கோவில்பட்டி கிருஷ்ணா நகர் பகுதி மக்கள் நேற்று கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் தெய்வேந் திரன், மாநில குழு உறுப்பினர் மல்லிகா, மாவட்ட குழு உறுப்பினர் ராமசுப்பு மற் றும் பலர் கலந்து கொண்டனர்.
அந்த மனுவில், கோவில்பட்டி கிருஷ்ணா நகருக்கு செல்லும் வழியில் இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணிக்காக, அங்குள்ள ரெயில்வே சுரங்க வழிப்பாதையை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத தால், பெத்தேல் விடுதி வழியாக சுமார் 4 கிலோ மீட் டர் தூரம் சுற்றிச் செல்கின்றனர்.
அந்த பாதையும் சேறும் சகதியுமாக உள்ளது. எனவே லட்சுமி மில் மேல காலனி வழியாக கிருஷ்ணா நகருக்கு செல்லும் வகையில், மாற்றுப்பாதை அமைத்து தர வேண்டும். கிருஷ்ணா நகர் அரசு கல்லூரி வரை மட்டுமே மினி பஸ்கள் இயக்கப்படுகிறது. எனவே கிருஷ்ணா நகரின் கடைசி எல்லை வரையிலும் மினி பஸ்களை இயக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதேபோன்று கோவில்பட்டி அனைத்து ரத்ததான கழக கூட்டமைப்பு நிர்வாகிகள், கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் இரவு நேரத்திலும் சி.டி.ஸ்கேன் எடுக்க வேண்டும். அல்ட்ரா ஸ்கேன் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். டாக்டர்களின் வேலை நேரத்தை உறுதிப்படுத்த வேண்டும். இதய நோய் சிகிச்சை டாக்டரை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவில்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்துவதற்கு கோவில்பட்டி கிழக்கு போலீசாரிடம் அனுமதி கேட்டு இருந்தோம். ஆனால் போலீசார் அனுமதி தர மறுத்து விட்டனர்.
எனவே உண்ணாவிரத போராட்டத்துக்கு அனுமதி வழங்க போலீசாரை அறிவுறுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
பின்னர் அவர்கள், கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் சென்று கோரிக்கை மனு கொடுத்தனர்.
கோவில்பட்டி அருகே வில்லிசேரி பகுதி மக்கள், கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், நாற்கர சாலையில் அமைந்துள்ள வில்லிசேரியில் அனைத்து பஸ்களும் நின்று செல்ல வேண்டும். இல்லையெனில் வருகிற 3-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) வில்லிசேரி நாற்கர சாலையில் மறியல் போராட்டம் நடத்துவோம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
மனுக்களை பெற்று கொண்ட உதவி கலெக்டர் விஜயா, அவற்றின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story