மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சரானால் தான் மக்களுக்கு மகிழ்ச்சி - திண்டுக்கல் லியோனி பேச்சு


மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சரானால் தான் மக்களுக்கு மகிழ்ச்சி - திண்டுக்கல் லியோனி பேச்சு
x
தினத்தந்தி 23 Aug 2019 4:30 AM IST (Updated: 23 Aug 2019 12:58 AM IST)
t-max-icont-min-icon

தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் வந்தால் தான் மக்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும் என்று முதுகுளத்தூரில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்கூட்டத்தில் திண்டுக்கல் லியோனி பேசினார்.

முதுகுளத்தூர்,

முதுகுளத்தூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் முதுகுளத்தூர் பஸ் நிலையம் எதிரே நடைபெற்றது. கூட்டத்துக்கு ராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் தலைமை தாங்கினார்.

முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி முன்னிலை வகித்தார். முதுகுளத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சண்முகம் வரவேற்று பேசினார்.

இதில் சிறப்பு அழைப்பாளராக திண்டுக்கல் லியோனி கலந்து கொண்டு பேசியதாவது:-

தி.மு.க. பொதுக்கூட்டத்துக்கு மக்கள் திரண்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழக முதல்-அமைச்சராக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டால் தான் மக்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான் ஒரு விவசாயி என்கிறார். விவசாயியின் நலனில் அக்கறை செலுத்துபவனே உண்மையான விவசாயி ஆவான். பா.ஜ.க.வின் நாடகம் வடமாநிலங்களில் எடுபட்டது.

ஆனால் தமிழகத்தில் எடுபடவில்லை. பா.ஜ.க.வினர் ரவை இல்லாமலேயே உப்புமா கிண்டி விட்டனர்.

தி.மு.க. கொள்கை மீது தமிழக மக்களுக்கு நம்பிக்கை உள்ளது. பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை தி.மு.க. தலைவர் ஸ்டாலினை போட்டிக்கு அழைத்து சவால் விடுகிறார். நான் சவால் விடுகிறேன், தமிழிசை என்னோடு போட்டி போட்டு மேடைகளில் பேசத்தயாரா? எனது பேச்சை கேட்க மக்கள் கூட்டம் வருவது போல தமிழிசை கூட்டத்துக்கு பொதுமக்கள் வராவிட்டால் அவர் மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்யத்தயாரா? தி.மு.க. பொதுக்கூட்டங்களில் பேசும்போது ஏன் கரை வேட்டியுடன் வருவதில்லை என்று தொண்டர்கள் கேட்கின்றனர். தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் எப்போது தேர்ந்தெடுக்கப்படுகிறாரோ, அன்று முதல் தி.மு.க. கரை வேட்டியுடன் பொதுக்கூட்டங்களில் பேசுவேன். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் முதுகுளத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பூபதிமணி, கமுதி ஒன்றிய செயலாளர் சோலை, இளைஞரணி செயலாளர் ராமர், வக்கீல்கள் அசன், அரிச்சந்திரன், மாவட்ட துணை செயலாளர்கள் செல்லமணி, கருப்பையா, வெந்நீர்வாய்க்கால் முருகன், முன்னாள் கவுன்சிலர் தூவல் திருமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story