பிளாஸ்டிக்கை ஒழிக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அவசியம் கலெக்டர் உமா மகேஸ்வரி பேட்டி


பிளாஸ்டிக்கை ஒழிக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அவசியம் கலெக்டர் உமா மகேஸ்வரி பேட்டி
x
தினத்தந்தி 23 Aug 2019 4:15 AM IST (Updated: 23 Aug 2019 1:31 AM IST)
t-max-icont-min-icon

பிளாஸ்டிக்கை ஒழிக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அவசியம் என கலெக்டர் உமா மகேஸ்வரி கூறினார்.

புதுக்கோட்டை,

தற்போது மழைக்காலம் தொடங்கி உள்ளதால் டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்கும் விதத்தில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் புதுக்கோட்டை மாவட்டத்தில் தூய்மை பணியை மேற்கொள்ளும் விதத்தில் நேற்று புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது. இந்த பணியை கலெக்டர் உமா மகேஸ்வரி தொடங்கி வைத்தார்.

அப்போது கலெக்டர் உமா மகேஸ்வரி வளாகத்தில் உள்ள குப்பைகளை பணியாளர்களுடன் சேர்ந்து அகற்றினார். பின்னர் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப்படுத்தும் பணி குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி சாந்தி, வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் பரணிதரன், கலைவாணி உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கலெக்டர் பேட்டி

பின்னர் கலெக்டர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இனி வரும் ஒவ்வொரு வியாழக்கிழமையும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தனியார் நிறுவன வளாகங்களில் ஒட்டு மொத்த தூய்மைப்பணி மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அந்நாளில் அப்பகுதியில் உள்ள அனைத்து குப்பைகள் மற்றும் திடக்கழிவுகளை அப்புறப்படுத்துதல், குடிநீர் ஆதார தொட்டிகளை தூய்மைப்படுத்தி குளோரினேசன் செய்தல் மற்றும் கொசு ஒழிப்பு பணிகள் உள்ளிட்ட தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

622 தற்காலிக பணியாளர்கள்

இந்த பணியின் பொது சுகாதாரத்துறையின் மூலம் 130 தற்காலிக களப்பணியாளர்கள், ஊராட்சி ஒன்றியங்கள் மூலம் 260 தற்காலிக களப்பணியாளர்கள், பேரூராட்சிகள் மூலம் 80 தற்காலிக பணியாளர்கள் மற்றும் நகராட்சிகள் மூலம் 152 தற்காலிக பணியாளர்கள் என மொத்தம் 622 தற்காலிக பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். குறிப்பாக பொதுமக்கள் தங்கள் வீட்டின் உள்ளேயும், வீட்டை சுற்றிலும் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகாத வகையில் தூய்மையாக பராமரித்துக் கொள்ள வேண்டும். பள்ளி மாணவர்களுக்கும் கொசுப்புழு உற்பத்தி தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகி றது.

இந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டு உள்ளது.

கொசுப்புழு உற்பத்தியை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். மாவட்ட நிர்வாகத்தின் விழிப்புணர்வையும் மீறி கொசுக்கள் உற்பத்தியாக காரணமாக இருக்கும் வீடுகள் மற்றும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, அபராதம் விதிக்கப்படும், மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. பல்வேறு இடங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. பிளாஸ்டிக்கை ஒழிக்க பொதுமக்களின் முழுமையான ஒத்துழைப்பு மிகவும் அவசியம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story