தேனியில், தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.1 கோடி கையாடல் - மேற்பார்வையாளருக்கு வலைவீச்சு


தேனியில், தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.1 கோடி கையாடல் - மேற்பார்வையாளருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 23 Aug 2019 3:45 AM IST (Updated: 23 Aug 2019 2:09 AM IST)
t-max-icont-min-icon

தேனியில் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.1 கோடி கையாடல் செய்த மேற்பார்வையாளரை போலீசார் தேடி வருகின்றனர்.

தேனி

இந்த சம்பவம் குறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-

தேனி நகரில் பெரியகுளம் சாலையில் ஒரு தனியார் நிதி நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தின் கிளைகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ளன. இந்த நிறுவனம் சார்பில் பொதுமக்களுக்கு கடன் வழங்கப்படுகிறது. அந்த கடன் தொகை பல தவணைகளாக வட்டியுடன் திரும்ப வசூல் செய்யப்படுகிறது. இந்த நிறுவனத்தின் மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களுக்கான மேலாளராக ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள ராமசாமிபட்டியை சேர்ந்த மோகன்ராஜ் (வயது 62) என்பவர் பணியாற்றுகிறார்.

இந்த நிறுவனத்தில் தேனி அருகே ஆதிப்பட்டி சாஸ்தா கோவில் தெருவை சேர்ந்த அருண்பாபு (37) என்பவர் தேனி மாவட்டத்துக்கான மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்தார். இவர் மாவட்டத்தில் உள்ள வாடிக்கையாளர்களிடம் இருந்து களப்பணியாளர்கள் வசூல் செய்து கொடுக்கும் பணத்தை நிறுவனத்தின் தலைமை அலுவலகத்துக்கு வங்கி மூலம் அனுப்பி வைக்கும் பணியை செய்து வந்தார்.

இந்நிலையில் களப் பணியாளர்கள் திலகராஜ், மகேஸ்வரன் ஆகியோர் வசூல் செய்த பணத்தை அருண்பாபுவிடம் கொடுத்துள்ளனர். அத்துடன், கடந்த 5-ந்தேதியில் இருந்து 8-ந்தேதி வரையிலான காலக்கட்டத்தில் அருண்பாபு நேரடியாக வாடிக்கையாளர்களிடம் இருந்து பணம் வசூல் செய்துள்ளார். அந்த வகையில் மொத்தம் ரூ.1 கோடியே 1 லட்சத்து 70 ஆயிரத்து 863 தொகையை நிறுவனத்தின் தலைமை அலுவலகத்துக்கு செலுத்தாமல் கையாடல் செய்துவிட்டு, அருண்பாபு தலைமறைவாகி விட்டார்.

இதுகுறித்து நிதிநிறுவனத்தின் மேலாளர் மோகன்ராஜ் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் புகார் செய்தார். அவர் இந்த புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்க மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில், அருண்பாபு மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள அருண்பாபுவை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்த வழக்கில் அருண்பாபுவின் நண்பர்களை போலீசார் கண்காணித்து வருவதோடு, அதில் சிலரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story