தேனியில், சட்டப்பேரவை பொதுக்கணக்கு குழுவினர் ஆய்வு அதிகாரிகளுடன் காரசார விவாதம்
தேனியில் சட்டப்பேரவை பொதுக்கணக்கு குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது அதிகாரிகளுடன் காரசார விவாதத்தில் ஈடுபட்டனர்.
தேனி,
தி.மு.க. பொருளாளரும், சட்டசபை எதிர்க்கட்சி துணை தலைவருமான துரைமுருகனை தலைவராக கொண்டு தமிழக சட்டப்பேரவை பொதுக்கணக்கு குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவின் தலைவர் துரைமுருகன் தலைமையில், உறுப்பினர்களாக உள்ள எம்.எல்.ஏ.க்கள் தா.உதயசூரியன், ம.கீதா, ஆர்.நடராஜ், வி.பி.பி.பரமசிவம், பழனிவேல் தியாகராஜன், கே.பி.பி.பாஸ்கர், கே.ஏ.எம்.முகமது அபுபக்கர், கே.மோகன், டி.ஆர்.பி.ராஜா மற்றும் அதிகாரிகள் தேனிக்கு வந்தனர்.
இந்த குழுவினர் நேற்று வைகை அணைக்கு சென்று அங்கிருந்து 58-ம் கால்வாயில் தண்ணீர் திறக்கும் மதகை பார்வையிட்டனர். பின்னர், தேனி அருகே முல்லைநகரில் உள்ள அங்கன்வாடி மையம், அரண்மனைப்புதூரில் ஒரு பசுமை வீடு ஆகியவற்றை நேரில் சென்று பார்வையிட்டனர். மேலும் பள்ளப்பட்டிக்கு தெற்கே கண்மாயில் இருந்து தண்ணீர் வெளியேறும் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பாலத்தை பார்வையிட்டனர்.
இதைத்தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு குழுவின் தலைவர் துரைமுருகன் தலைமை தாங்கினார். அப்போது அவர் ஒவ்வொரு துறை வாரியாக அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டு ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வுக்கூட்டத்தில் அதிகாரிகளுடன் நடந்த விவாதங்கள் காரசாரமாக இருந்தது. அதிகாரிகள் சிலரின் பதில்கள் ஏற்புடையதாக இல்லை என்று குழுவின் தலைவர் அவர்களை கண்டிக்கவும் செய்தார்.
தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் 31 குடியிருப்புகளுக்கு சாலை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு, நிதி வழங்கப்பட்டுள்ளது. இதில், 24 இடத்தில் சாலை அமைக்கப்பட்ட நிலையில், மீதம் உள்ள இடங்களுக்கு சாலை அமைக்காமல் அந்த நிதியை பணிக்கு பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் குழுவின் தலைவர் துரைமுருகன் விளக்கம் கேட்டார். இந்த சாலைகள் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டதிலும் குறிப்பிட்ட விதிகளை பின்பற்றவில்லை என்று அவர் கண்டிப்பு தெரிவித்தார். பின்னர், வேளாண்மைத்துறையில் விதைகள் கால தாமதமாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது குறித்தும் விளக்கம் கேட்டார்.
தேவாரம் உள்ளிட்ட பகுதிகளில் வன விலங்குகளால் மக்களுக்கு பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் ஏற்படுவதால் அதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், இதற்காக அரசு வழங்கிய நிதியை கொண்டு மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தும் விளக்கம் கேட்டார். அதற்கு மாவட்ட வன அலுவலர் கவுதம் பதில் அளிக்கையில், வனப்பகுதியை ஒட்டி வசிக்கும் மக்களுக்கு இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும், வன விலங்குகள் விவசாய நிலங்களுக்கு வராமல் தடுக்க அகழிகள், வேலிகள் அமைக்கும் பணிகள் நடப்பதாகவும் தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து வருசநாடு வனப்பகுதிகளில் வாழும் மக்களை வெளியேற்ற நடக்கும் முயற்சிகள் குறித்த விவாதம் நடந்தது. அப்போது குழுவின் தலைவர் துரைமுருகன், ‘வனப்பகுதியில் மக்கள் வாழும் ஊர்களுக்கு அரசு பள்ளி கட்டிடம் கட்டிக் கொடுத்துள்ளது. அவர்கள் காலம் காலமாக அங்கு வாழ்கின்றனர். அவர்களை ஏன் வெளியேற்ற வேண்டும்? அவ்வாறு வெளியேற்றுவதாக இருந்தாலும் அவர்களுக்கு மாற்று குடியிருப்பு, பள்ளி வசதி, சாலை வசதிகள் ஏற்படுத்திக் கொடுத்த பின்னரே வெளியேற்ற வேண்டும்’ என்றார்.
அதற்கு கலெக்டர் பல்லவி பல்தேவ் பதில் அளிக்கையில், ‘இதுகுறித்து முதல்-அமைச்சர் தலைமையில் நடந்த மாவட்ட கலெக்டர்களுக்கான கூட்டத்தில் நான் பேசினேன். மக்களுக்கும் பாதிப்பு ஏற்படக்கூடாது, வனப் பகுதிக்கும் பாதிப்பு ஏற்படக்கூடாது என்று முதல்-அமைச்சர் தெரிவித்துள்ளார். அதனால், மக்களுக்கான மாற்று ஏற்பாடுகள் செய்யும் முன்பு அவர்கள் வெளியேற்றப்பட மாட்டார்கள். அதேநேரத்தில் கோர்ட்டு உத்தரவையும் அவமதிக்கக்கூடாது என்ற நிலைமை உள்ளது’ என்றார்.
இதுபோன்று, ஒவ்வொரு துறை வாரியாகவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த கூட்டத்தில், தேனி எம்.பி. ப.ரவீந்திரநாத்குமார், கம்பம் எம்.எல்.ஏ. ஜக்கையன், ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ. மகாராஜன், பெரியகுளம் எம்.எல்.ஏ. சரவணக்குமார் மற்றும் அரசின் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story