ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதில் அரசியல் உள்நோக்கம்; தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் சொல்கிறார்


ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதில் அரசியல் உள்நோக்கம்; தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் சொல்கிறார்
x
தினத்தந்தி 23 Aug 2019 3:30 AM IST (Updated: 23 Aug 2019 2:09 AM IST)
t-max-icont-min-icon

ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதில் அரசியல் உள்நோக்கம் உள்ளதாக தேனியில் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் கூறினார்.

தேனி,

தமிழக சட்டப்பேரவை பொதுக்கணக்கு குழு தலைவராக, தி.மு.க. பொருளாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவருமான துரைமுருகன் நியமிக்கப்பட்டு உள்ளார். இந்த குழுவினர் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஆய்வுக்கூட்டம் நடத்தினர்.

கூட்டம் முடிந்து கலெக்டர் அலுவலகத்தை விட்டு வெளியே வந்த துரைமுருகனிடம் நிருபர்கள் பேட்டி கேட்டனர். அப்போது, அவரிடம், ‘ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டது குறித்து உங்கள் கருத்து என்ன?’ என்று நிருபர்கள் கேட்டனர்.

அதற்கு, அவர் ‘இந்த வழக்கை சட்டப்பூர்வமாக எதிர்கொண்டு எப்படி வாதாடி வெளியே வர வேண்டும் என்பது அவருக்கு (ப.சிதம்பரம்) தெரியும். இது அரசியல் உள்நோக்கத்தோடு தொடரப்பட்ட வழக்கு தான். அவர் கைது செய்யப்பட்டதிலும் அரசியல் உள்நோக்கம் உள்ளது. இதை அரசியலாக தான் பார்க்க முடியும்’ என்றார்.

முன்னதாக அவர் சட்டப்பேரவை பொதுக்கணக்கு குழு ஆய்வு தொடர்பாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:-

வைகை அணையில் இருந்து 58 கிராமங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்வதற்காக அமைக்கப்பட்ட வாய்க்காலை பார்க்க வேண்டும் என்று உறுப்பினர்கள் சிலர் கூறினார்கள். அதனால், அங்கு சென்று பார்வையிட்டோம். பின்னர், ஒரு அங்கன்வாடி மையம், ஒரு பசுமை வீடு ஆகியவற்றை பார்த்தோம். வளர்ச்சி திட்டங்களுக்கு கொடுக்கப்பட்ட நிதி சரியாக செலவு செய்யப்பட்டுள்ளதா? குறிப்பிட்ட காலத்தில் திட்டப்பணிகள் முடிக்கப்பட்டுள்ளதா? அதில் எதுவும் குறைபாடு உள்ளதா? என்பதை ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டியது இந்த குழுவின் நோக்கம். தேனி மாவட்டத்தில் மேற்கொண்ட ஆய்வு திருப்திகரமாக இருந்ததா? இல்லையா? என்பதை இப்போது சொல்ல முடியாது. அதை அறிக்கையில் விரிவாக தெரிவிப்பேன்.

வைகை அணையை தூர்வார வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கின்றனர். நான் பொதுப்பணித்துறை அமைச்சராக 17 ஆண்டு காலம் இருந்தவன். அணையை தூர்வாருவது அவ்வளவு சாதாரணமான விஷயம் இல்லை. அணைகளை தூர்வாரியதாக எங்கும் தகவல் இல்லை. அதனால் தான் ஆதி காலத்திலேயே தண்ணீர் போக்கி என்பது போல் மணல் போக்கியும் அமைக்கப்பட்டு இருக்கும். அந்த மண் தான் ஆற்றில் வரும். அந்த மண்ணை தான் அப்புறம் விற்று விடுவார்கள்.

வருசநாடு வனப் பகுதியில் நீண்ட காலமாக வாழ்க்கை நடத்துபவர்களை வேறு இடத்துக்கு மாற்றுவது சரியான காரணம் அல்ல. அப்படியே மாற்றுவதாக இருந்தாலும் அவர்களுக்கு வீடு வசதி, சாலை வசதி, பள்ளி வசதிகள் செய்து கொடுத்து விட்டு தான் மாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story