ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து, காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்- மறியல்
ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர்,
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் நேற்று முன்தினம் டெல்லியில் சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இந்த நடவடிக்கைக்கு பல்வேறு அரசியில் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பா.ஜனதா அரசு தமது கைப்பாவையாக உள்ள மத்திய புலனாய்வு துறையை ஏவிவிட்டு பழிவாங்கும் நோக்கத்தில் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், இதை கண்டிக்கும் விதமாக தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்து இருந்தார். அதன்படி கடலூர் மாவட்டத்தில் நேற்று பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் மற்றும் மறியலில் ஈடுபட்டனர்.
கடலூரில் காங்கிரஸ் கட்சியினர் கடலூர் தலைமை தபால் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் குமார் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சாந்திராஜ், திலகர், குள்ளபிள்ளை, கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட துணைத்தலைவர்கள் ரங்கமணி, முருகன், பொதுச்செயலாளர் ரவிக்குமார், கிஷோர், பார்த்திபன், ராஜேஷ், மார்க்கெட் மணி, நகர செயலாளர் கோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர். அவர்கள் சிறிதுநேரம் மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பி விட்டு கலைந்து சென்றனர்.
சிதம்பரத்தில் கஞ்சிதொட்டி முனை என்கிற இடத்தில் கடலூர் சாலையில் நேற்று காலை காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதற்கு கட்சியின் நகர தலைவர் பழனி தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சித்தார்த்தன், ஜெயசந்திரன், வெங்கடேசன், மாநில காங்கிரஸ் துணை தலைவர் செந்தில்குமார், பரங்கிப்பேட்டை வட்டார தலைவர் சுந்தர்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் ரவிச்சந்திரன், சத்திமிர்த்தி, கட்டாரி.சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தகவல் அறிந்த சிதம்பரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட 20 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
இதேபோல் திட்டக்குடியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு அன்பரசு தலைமை தாங்கினார். செல்வமணி, கந்தசாமி, ராமலிங்கம், சீனிவாசன், சரவணன், அசோக்குமார், மனோகரன், முருகேசன், விஜயகுமார், சக்திவேல், உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது ப.சிதம்பரம் கைதை கண்டித்தும், அவரை உடனடியாக விடுவிக்க கோரியும் கண்டன கோஷங்களை எழுப்பினர். இதுபற்றி அறிந்த திட்டக்குடி போலீசார் விரைந்து வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் 2 பெண்கள் உள்பட 15 பேரை கைது செய்தனர். கைதான அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
இதேப்போல் ஸ்ரீமுஷ்ணம், ஊ.மங்கலம், வேப்பூர், புவனகிரி ஆகிய இடங்களிலும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டங்கள் தொடர்பாக ஸ்ரீமுஷ்ணத்தில் 42 பேர் மீதும், ஊ.மங்கலத்தில் 14 பேர் மீதும், வேப்பூரில் 35 பேர் மீதும், புவனகிரியில் 45 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
Related Tags :
Next Story