மூங்கில்துறைப்பட்டு அருகே, ஊராட்சி செயலாளரை சிறைவைத்து பொதுமக்கள் போராட்டம்
மூங்கில்துறைப்பட்டு அருகே ஊராட்சி செயலாளரை சிறைவைத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மூங்கில்துறைப்பட்டு,
மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள கடுவனூர் கிராமத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு ஆழ்துளை கிணறும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியும் அமைத்து தெரு குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் அப்பகுதி மக்களுக்கு கடந்த சில நாட்களாக சரியான முறையில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என தெரிகிறது. இதுகுறித்து அவர்கள் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகே புதிதாக குழாய் அமைத்து அதன் மூலம் குடிநீர் பிடித்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு அனைவரும் இங்கு வந்து குடிநீர் பிடித்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது.
இதனால் வெகு தொலைவில் உள்ள பொதுமக்கள் இங்கு வந்து குடிநீர் பிடித்து செல்வதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் நேற்று ஊராட்சி அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். தொடர்ந்து அங்கிருந்த ஊராட்சி செயலாளர் வேலுவை அலுவலகத்துக்குள் சிறைவைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த சங்கராபுரம் போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், எங்கள் பகுதிக்கு பழைய முறையில் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். அதற்கு போலீசார் ,இதுகுறித்து அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையேற்ற பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதையடுத்து பொதுமக்கள் சிறைவைத்த ஊராட்சி செயலாளரை விடுவித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story