பெரியகுளம் அருகே, ரூ.6 கோடியில் மலைக்கிராமத்துக்கு சாலை அமைக்கும் பணி - 2 கிலோமீட்டர் நடந்து சென்று கலெக்டர் ஆய்வு
பெரியகுளம் அருகே ரூ.6 கோடியில் மலைக்கிராமத்துக்கு சாலை அமைக்கும் பணி தொடர்பாக கலெக்டர் பல்லவி பல்தேவ், அதிகாரிகள் குழுவினருடன் 2 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று ஆய்வு செய்தார்.
பெரியகுளம்,
பெரியகுளம் அருகே சோத்துப்பாறையில் இருந்து அகமலை செல்லும் சாலையில் கண்ணக்கரை என்ற பகுதி உள்ளது. இங்கு ஒரு உண்டு உறைவிட பள்ளி அமைந்துள்ளது. இங்கிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் சொக்கனலை கிராமம் உள்ளது. இந்த மலைக்கிராமத்துக்கு செல்வதற்கு சாலை வசதி கிடையாது. ஒத்தையடி பாதையில் தான் நடந்து செல்ல வேண்டும். கண்ணக்கரையில் உள்ள ஆற்றைக் கடந்து செல்ல வேண்டும் என்பதால் இருசக்கர வாகனங்களில் கூட செல்ல முடியாது.
இதையடுத்து இந்த மலைக்கிராமத்துக்கு சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக 2 கிலோமீட்டர் தூரம் தார்சாலை அமைக்க ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் சாலை அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடத்தில் உள்ள மரங்களை வெட்டுவதற்கு அனுமதி கிடைக்காமல் இருந்தது.
இந்நிலையில் இந்த சாலை அமைக்கும் பணி தொடர்பாக மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். கண்ணக்கரையில் இருந்து சொக்கனலைக்கு அவர் நடந்து சென்றார். அவருடன் மாவட்ட வன அலுவலர் கவுதம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட செயற்பொறியாளர் கவிதா மற்றும் அதிகாரிகள் பலர் உடன் சென்றனர்.
2 கிலோமீட்டர் தூரம் கலெக்டரும், அதிகாரிகளும் நடந்து சென்று ஆய்வு செய்தனர். ஆய்வின் போது விவசாயிகள் சிலரும் உடன் சென்றனர். அப்போது விவசாயிகள் அந்த பகுதிகளில் தாங்கள் சந்திக்கும் பிரச்சினைகள் மற்றும் குறைகளை கலெக்டரிடம் தெரிவித்தனர்.
சொக்கனலை கிராமத்துக்கு சென்ற கலெக்டர் அங்குள்ள வீடுகள் அதிக அளவில் சேதம் அடைந்து, இடிந்து விழும் நிலையில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அங்குள்ள மக்களிடம் அவர் குறைகளை கேட்டறிந்தார். அப்போது மக்கள் தங்களுக்கு அரசு தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுத்ததாகவும், பின்னர் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாமல் சிதிலம் அடைந்து உள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதையடுத்து அங்கு வசிக்கும் குடும்பத்தினர் தனித்தனியாக மனு அளிக்குமாறும், மனு அளிப்பவர்களுக்கு இலவச வீடுகள் கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் கலெக்டர் உறுதி அளித்தார். இந்த ஆய்வின் போது, மலைக்கிராமத்தை சேர்ந்த 40 விவசாயிகளுக்கு வன உரிமை சட்டத்தின் கீழ் பட்டாக்களை கலெக்டர் வழங்கினார்.
Related Tags :
Next Story