இடைத்தேர்தல் முடிந்து பல மாதங்கள் ஆகியும் பயன்பாட்டுக்கு வராத ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ. அலுவலகம்


இடைத்தேர்தல் முடிந்து பல மாதங்கள் ஆகியும் பயன்பாட்டுக்கு வராத ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ. அலுவலகம்
x
தினத்தந்தி 24 Aug 2019 10:15 PM GMT (Updated: 24 Aug 2019 3:03 PM GMT)

ஆண்டிப்பட்டி இடைத்தேர்தல் முடிந்த பல மாதங்கள் ஆகியும் இதுவரையில் எம்.எல்.ஏ. அலுவலகம் பயன்பாட்டுக்கு வரவில்லை. இதனால் மனுகொடுக்க வரும் மக்கள் ஏமாற்றமடைந்து வருகின்றனர்.

ஆண்டிப்பட்டி,

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலோடு காலியாக இருந்த 22 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியிலும் இடைத்தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் தி.மு.க வேட்பாளர் மகாராஜன் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக பதவியேற்றுக் கொண்டார்.

20 ஆண்டுகளாக அ.தி.மு.க. வசமிருந்த ஆண்டிப்பட்டி தொகுதி தி.மு.க. வசமானதால், தேர்தல் முடிவு வந்தவுடன் எம்.எல்.ஏ. அலுவலகத்தை அ.தி.மு.க. காலி செய்தது. அதன் பின்னர் ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ. அலுவலகத்தை கையகப்படுத்திய வருவாய்த்துறையினர் கட்டிடத்தில் வண்ணம் பூசுதல் உள்ளிட்ட சில மராமத்து பணிகளை செய்தனர்.

பணிகள் முடிந்த பல நாட்கள் ஆகியும் இதுவரை ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ. அலுவலகம் பூட்டிய நிலையிலேயே காட்சியளிக்கிறது. இதனால் ஆண்டிப்பட்டி அலுவலகத்துக்கு மனுக்கள் கொடுக்க வரும் மக்கள் ஆண்டிப்பட்டி நகரில் உள்ள தி.மு.க. எம்.எல்.ஏ. வீட்டிற்கு செல்லும் நிலை உள்ளது.

எம்.எல்.ஏ. அலுவலகம் பயன்பாட்டுக்கு வராத காரணத்தால் மனுகொடுக்க வரும் மக்களை தி.மு.க. எம்.எல்.ஏ மகாராஜன் தனது வீட்டிலேயே சந்தித்து குறைகளை கேட்டு வருகின்றார். மக்களுக்கு வீண் அலைக்கழிப்பு ஏற்படுவதால் பயன்பாட்டிற்கு வராமல் இருக்கும் ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ. அலுவலகத்தை திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story