நீர்நிலைகள் பாதுகாப்பு குறித்து 130 ஊராட்சிகளில் சிறப்பு கிராமசபை கூட்டம்


நீர்நிலைகள் பாதுகாப்பு குறித்து 130 ஊராட்சிகளில் சிறப்பு கிராமசபை கூட்டம்
x
தினத்தந்தி 24 Aug 2019 10:30 PM GMT (Updated: 24 Aug 2019 3:06 PM GMT)

தேனி மாவட்டத்தில் உள்ள 130 ஊராட்சிகளிலும் நீர்நிலைகள் பாதுகாப்பு குறித்து சிறப்பு கிராமசபை கூட்டம் நடந்தது.

தேனி,

தேனி மாவட்டத்தில் 130 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் நீர்மேலாண்மை மற்றும் பாதுகாப்பு குறித்து சிறப்பு கிராமசபை கூட்டம் நடத்த கலெக்டர் பல்லவி பல்தேவ் உத்தரவிட்டார். அதன்பேரில், அனைத்து ஊராட்சிகளிலும் சிறப்பு கிராமசபை கூட்டம் நேற்று நடந்தது.

கூட்டத்தில் குடிநீர் ஆதாரங்களை அதிகரித்தல், குளம், கண்மாய்கள், வரத்து வாய்க்கால்களை தூர்வாரி பராமரித்தல், தூர்வாரப்பட்ட நீர்நிலைகளை தொடர்ந்து பராமரித்தல், நீர்நிலைகளில் குப்பைகள் கொட்டுவதை தடுப்பது போன்ற விவாதங்கள் நடத்தப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கடமலை-மயிலை ஒன்றியத்தில் கோம்பைத்தொழு, தும்மக்குண்டு ஆகிய ஊராட்சிகளில் 30-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் அமைந்துள்ளன. கடந்த சில நாட்களாக மலைக்கிராம மக்களை வனப்பகுதியில் இருந்து வெளியேற்ற வனத்துறையினர் பல்வேறு கட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் கோம்பைத்தொழு, தும்மக்குண்டு கிராமங்களில் நடந்த கிராம சபை கூட்டங்களில் மலைவாழ் மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதில் கோம்பைத்தொழு ஊராட்சிக்கு உட்பட்ட அரசரடி கிராமத்தில் கிராம சபை கூட்டம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திலகவதி மற்றும் மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் துறை மாவட்ட துணை கலெக்டர் சாந்தி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் மழைநீரை சேகரிப்பது, குளம், கண்மாய்களை தூர்வாருவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதேபோல தும்மக்குண்டு ஊராட்சியில் பெரியகுளம் ஆர்.டி.ஓ.ஜெயப்பிரித்தா தலைமையில் கிராமசபை கூட்டம் நடந்தது. இதில் ஊராட்சி செயலர் சின்னச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். வனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் 2 ஊராட்சிகளிலும் நடந்த கிராமசபை கூட்டங்களில் மலைக்கிராமங்களை சேர்ந்த 15 பேர் அடங்கிய வன உரிமைக்குழு அமைக்கப்பட்டது.

ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பிச்சம்பட்டி, ஜி.உசிலம்பட்டி, ஓக்கரைப்பட்டி, கொத்தபட்டி, கன்னியப்பபிள்ளைபட்டி, ராமகிருஷ்ணாபுரம், தெப்பம்பட்டி, பாலக்கோம்பை, மரிக்குண்டு, மொட்டனூத்து, ராஜதானி, தேக்கம்பட்டி உள்ளிட்ட 30 ஊராட்சிகளில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடந்தது. இந்த கிராம சபை கூட்டங்களை ஆண்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆண்டாள், ரெங்கராஜ் ஆகியோர் ஆய்வு செய்தனர். போடி ஊராட்சி ஒன்றியம் உப்புக்கோட்டை ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. ஊராட்சி ஒன்றிய உதவி செயற்பொறியாளர் சின்னவீரணன் தலைமை தாங்கினார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நாகராணி முன்னிலை வகித்தார். முடிவில் ஊராட்சி செயலாளர் திருப்பதி நன்றி கூறினார்.

Next Story