மத்திய அரசின் திட்ட செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை தேவை; கண்காணிப்பு அதிகாரி நடவடிக்கை எடுக்க கோரிக்கை


மத்திய அரசின் திட்ட செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை தேவை; கண்காணிப்பு அதிகாரி நடவடிக்கை எடுக்க கோரிக்கை
x
தினத்தந்தி 25 Aug 2019 3:45 AM IST (Updated: 24 Aug 2019 10:43 PM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் மாவட்டத்தில் மத்திய அரசின் திட்ட செயல்பாடுகள் வெளிப்படையாக நடைபெற மத்திய அரசின் கண்காணிப்பு அதிகாரி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

விருதுநகர்,

மத்திய அரசு முன்னேற துடிக்கும் மாவட்டங்கள் பட்டியலில் கடந்த 2018-ம் ஆண்டு விருதுநகர் மாவட்டத்தையும் தேர்ந்தெடுத்து இம்மாவட்டத்தில் 3 ஆண்டுகளில் தொடக்க கல்வி, சுகாதாரம் ஆகியவற்றை மேம்படுத்தி இம்மாவட்டத்தை முன்னோடி மாவட்டம் ஆக்க திட்டமிட்டுள்ளது. மேலும் இம்மாவட்டத்தில் நீர்வளத்தை மேம்படுத்தவும், பாரம்பரிய நீர்நிலைகளை புனரமைக்கவும், மரக்கன்றுகளை நடவும் மத்திய நீர்வளத்துறை திட்டமிட்டு 2023-ம் ஆண்டிற்குள் இத்திட்டத்தினை முழுமையாக செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. இது தவிர தூய்மை இந்தியா திட்டத்தையும் முனைப்புடன் செயல்படுத்த மத்திய அரசு தீர்மானித்துள்ளது.

முன்னேற துடிக்கும் மாவட்ட திட்டத்தின் கீழ் தொடக்க காலத்தில் திட்ட பணிகளை மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் நேரடியாக ஆய்வு செய்து வந்தார். தற்போது அது தொடரவில்லை. இத்திட்ட செயல்பாடுகளை கண்காணிக்க மத்திய அரசின் இணை செயலாளர் பிரவீன் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அவ்வப்போது வந்து மாவட்ட அதிகாரிகளுடன் கலந்தாய்வு செய்கிறாரே தவிர கள ஆய்வுகள் செய்வதில்லை.

இதனால் மத்திய அரசின் இந்த திட்ட செயல்பாடுகளில் எதிர்பார்க்கும் முனைப்பு இல்லாத நிலையில் குறிப்பிட்ட கால கெடுவுக்குள் இத்திட்டங்கள் முழுமை பெறுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

இத்திட்டங்கள் பற்றிய அறிவிப்புகள் வெளியான உடன் இம்மாவட்ட மக்கள் மத்திய அரசு நேரடியாகவே இத்திட்டங்களை செயல்படுத்த முன்வந்துள்ளதால் குறிப்பிட்ட கால கெடுவுக்குள் விருதுநகர்மாவட்டம் முன்னோடி மாவட்டமாக உருவாகும் என்றும், மாவட்டத்தில் நீர்வளம் மேம்படும் என்றும் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் இத்திட்ட செயல்பாடுகள் பற்றி மாவட்ட மக்களுக்கு எந்தவித தகவலும் இல்லாத நிலையில் இந்த திட்டம் அமல்படுத்தப்படுகிறதா என்ற சந்தேகம் ஏற்படும் நிலை உள்ளது. எனவே திட்ட செயல்பாடுகளில் மாவட்ட மக்களுக்கு தெரியும் வகையில் வெளிப்படைத்தன்மை தேவையாகி உள்ளது.

மாவட்ட நிர்வாகம் இத்திட்ட செயல்பாடுகள் குறித்தும், திட்ட முன்னேற்றம் குறித்தும் எவ்வித தகவலும் வெளியிடாத நிலையில் இத்திட்டத்திற்கான கண்காணிப்பு அதிகாரி பிரவீன்குமார் திட்ட செயல்பாடுகள் குறித்து மாவட்ட மக்களுக்கு தெரியப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. மேலும் அவர் மாவட்டத்திற்கு வருகை தரும்போது கள ஆய்வு மேற்கொண்டு அங்குள்ள மக்களை சந்தித்து அவர்கள் கருத்துக்களையும் கேட்டு அதற்கு ஏற்றாற்போல் நடவடிக்கையை விரைவுப்படுத்த வேண்டியதும் அவசியம் ஆகும். இல்லையேல் இம்மாவட்ட மக்களுக்கு மத்திய அரசு அறிவிப்புகள் அமல்படுத்தப்படாமல் கைவிடப்பட்டு விடுமோ என்ற எண்ணம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

Next Story