தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவல் எதிரொலி: சோதனை சாவடிகளில் 2-வது நாளாக தீவிர கண்காணிப்பு


தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவல் எதிரொலி: சோதனை சாவடிகளில் 2-வது நாளாக தீவிர கண்காணிப்பு
x
தினத்தந்தி 24 Aug 2019 11:15 PM GMT (Updated: 24 Aug 2019 6:49 PM GMT)

தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவல் எதிரொலியால் சோதனை சாவடிகளில் 2-வது நாளாக தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர். மேலும் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்கள் மற்றும் ஈரோடு வழியாக செல்லும் ரெயில்களில் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தி இருந்தனர்.

ஈரோடு,

தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவியதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளன். பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், பிரபலமான கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள் உள்ளிட்ட இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. பல்வேறு இடங்களில் வாகன சோதனையும் செய்யப்பட்டு வருகிறது.

ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.சக்தி கணேசன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டு உள்ளனர். மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு, அனைத்து வாகனங்களும் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.

இந்த நிலையில் நேற்று 2-வது நாளாக தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். சத்தியமங்கலம் அருகே கர்நாடகா மாநிலம் செல்லும் வழியில் பண்ணாரி சோதனை சாவடி உள்ளது.

இங்கு நேற்று முன்தினம் இரவு சத்தியமங்கலம் போலீஸ் துணை சூப்பிரண்டு சுப்பையன் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மேற்பார்வையில், சப்-இன்ஸ்பெக்டர் தனபால் தலைமையில் 4 போலீசார் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் நக்சலைட் தடுப்பு தனிப்பிரிவு படை போலீசார் 7 பேரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். அந்த வழியாக வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினார்கள்.

இதேபோல் கொடுமுடி அருகே உள்ள ஈரோடு மாவட்ட எல்லையான நொய்யல் சோதனை சாவடியில் கொடுமுடி போலீசார் வாகன சோதனை நடத்தினார்கள். தமிழக- கர்நாடக மாநில எல்லையான பாலாற்றின் அருகே பாலத்தில் பர்கூர் போலீசார் மற்றும் வனத்துறையினரும், பர்கூர் போலீஸ் நிலையம் முன்பு சோதனை சாவடி, செல்லாம்பாளையம் போலீஸ் சோதனை சாவடியிலும் வாகன சோதனை நடந்தது.

ஈரோடு மாவட்ட எல்லையான புஞ்சைபுளியம்பட்டி டானா புதூர் போலீஸ் சோதனை சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் இருந்து கர்நாடகா மாநிலம் செல்லும் வாகனங்கள் மற்றும் ஈரோடு மாவட்டம் மற்றும் கர்நாடகா மாநிலத்தில் இருந்தும் கேரளா செல்லும் பஸ்கள், கார் லாரி உள்ளிட்ட வாகனங்களில் போலீசார் சோதனை செய்தனர்.

கொடுமுடி மகுடேஸ்வரர் வீரநாராயணப்பெருமாள் கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோவில் செயல் அலுவலர் முத்துசாமி, தக்கார் நந்தகுமார் தலைமையில் கோவில் பணியாளர்கள் அனைத்து பக்தர்களின் உடைமைகளையும் சோதனை செய்த பிறகே கோவிலுக்குள் அனுமதித்தார்கள்.

இதேபோல் முக்கிய கோவில்களான ஈரோடு பெரிய மாரியம்மன், கோட்டை ஈஸ்வரன் கோவில், பெருமாள் கோவில், மகிமாலீஸ்வரர் கோவில், கொங்கலம்மன் கோவில், திண்டல் முருகன் கோவில் ஆகிய இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் உள்ள பவானி சங்கமேஸ்வரர், பண்ணாரியம்மன், பாரியூர் கொண்டத்து காளியம்மன், பச்சைமலை முருகன் உள்ளிட்ட கோவில்களில் போலீசார் சாதாரண உடையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். கோவில்களில் உள்ள தேவையற்ற பொருட்களை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். மேலும், கண்காணிப்பு கேமராக்கள் மூலமாக கோவில் வளாகம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் லாட்ஜ்களில் தங்கி உள்ளவர்களின் விவரங்களை போலீசார் ஆய்வு செய்தனர்.

2-வது நாளாக நேற்றும் ஈரோடு ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அங்கு பயணிகளின் உடைமைகளை சோதனையிட்ட பிறகே உள்ளே செல்ல அனுமதித்தனர். மேலும், ஓடும் ரெயில்களிலும் ரெயில்வே போலீசாரும், ரெயில்வே பாதுகாப்பு படையினரும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது மெட்டல் டிடெக்டர் மூலமாக பயணிகளின் உடைமைகள் சோதனையிடப்பட்டது. மேலும், சந்தேகப்படும்படி சுற்றி திரியும் நபர்களையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

Next Story