செல்போன் பேசிக்கொண்டே சென்றதால் விபரீதம்: முதல்மாடியில் இருந்து தவறி கீழே விழுந்த தொழிலாளி சாவு


செல்போன் பேசிக்கொண்டே சென்றதால் விபரீதம்: முதல்மாடியில் இருந்து தவறி கீழே விழுந்த தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 25 Aug 2019 4:30 AM IST (Updated: 25 Aug 2019 12:34 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் முதல் மாடியில் செல்போன் பேசிக்கொண்டு நடந்து சென்ற தொழிலாளி தவறி கீழே விழுந்ததில் பரிதாபமாக இறந்தார்.

வீரபாண்டி,

இன்று மனிதனின் ஆறாவது விரலாகி போனது செல்போன். சட்டை பாக்கெட்டில் பேனா இருக்கிறதோ இல்லையோ கட்டாயம் செல்போன் அதை ஆக்கிரமித்து கொள்கிறது. அந்த அளவுக்கு இன்றைய மனிதர்கள் செல்போன் மோகத்தில் சிக்கி தவிக்கின்றனர். மனிதனின் நேரத்தை இன்றைய ஸ்மார்ட் போன்கள் விழுங்கி கொண்டு இருக்கின்றன.

சாலையில் நடந்து செல்வோர் கூட ஸ்மார்ட் போன்களை பார்த்தப்படி செல்கின்றனர். எதிரே வருபவர்கள் யார் என்று தெரியாமல் நேருக்கு நேர் முட்டி காயம் அடைகின்றனர். சில நேரங்களில் எதிரே வரும் வாகனங்களில் அடிப்பட்டு விபத்துகளில் சிக்கி கொள்பவர்களும் உண்டு. இதே போல் வாகனங்களில் ஓட்டும் போது ஸ்மார்ட் போனை பயன்படுத்துபவர்கள் எதிரே வரும் வாகனங்களில் மோதி விபத்துகளில் சிக்கி கொள்கின்றனர். எனவே செல்போன் பயன்படுத்துவதை தேவைக்கு பயன்படுத்த வேண்டும் என்பதை அனைவரும் உணர வேண்டும்.

இந்த நிலையில் மாடியில் நின்று செல்போனில் பேசிய தொழிலாளி ஒருவர் கவனம் சிதறலால் தனது இன்னுயிரை இழந்து உள்ளார். அது பற்றிய விவரம் வருமாறு:-

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் மதிவாணன் (வயது 23). இவர் திருப்பூர் பாரதி நகர் பகுதியில் தங்கி அதே பகுதியில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் கடந்த ஒரு ஆண்டாக தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் வேலை பார்த்த பனியன் நிறுவனம் கட்டிடத்தின் முதல் மாடியில் இருந்தது. அதற்கு செல்ல கட்டிடத்தின் வெளிப்பகுதியில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு இருந்தன.

இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி இரவு 9 மணி அளவில், தான் பணிபுரியும் பனியன் நிறுவனத்தின் முதல் மாடியில் மதிவாணன் செல்போனில் பேசிக்கொண்டு நடந்து சென்றார். அப்போது முதல்மாடி தளத்தில் எதிர்பாராதவிதமாக இரும்பு தடுப்பு கம்பியை பிடிக்க முற்பட்டு அதில் இருந்து தவறி கீழே விழுந்தார்.

முதல் மாடியில் இருந்து கீழே விழுந்ததால் மதிவாணனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். காயம் அடைந்த மதிவாணனை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி மதிவாணன் பலியானார்.

இதுகுறித்து வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story