கிருஷ்ணகிரி ஒன்றியத்தில் ஏரி தூர்வாரும் பணிகளை கலெக்டர் ஆய்வு


கிருஷ்ணகிரி ஒன்றியத்தில் ஏரி தூர்வாரும் பணிகளை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 24 Aug 2019 11:15 PM GMT (Updated: 24 Aug 2019 7:05 PM GMT)

கிருஷ்ணகிரி ஒன்றியத்தில் ஏரி தூர்வாரும் பணிகளை மாவட்ட கலெக்டர் பிரபாகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி ஒன்றியம் ஆலப்பட்டி, கங்கலேரி ஊராட்சியில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் குட்டைகள் மற்றும் ஏரிகள் தூர்வாரும் பணிகள் தற்போது நடந்து வருகிறது. இந்த பணிகளை கலெக்டர் பிரபாகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

கிருஷ்ணகிரி ஒன்றியம் ஆலப்பட்டி ஊராட்சியில் ரூ. 1 லட்சம் மதிப்பில் சாமன்குட்டையில் தூர்வாரும் பணி மற்றும் கரையை பலப்படுத்தும் பணியும், 12 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஆலப்பட்டி ஏரியை ரூ. 5 லட்சம் மதிப்பில் தூர்வாரும் பணிகளும் நடந்து வருகிறது.

மேலும், ஏரிக்கு வரும் நீர்வரத்து கால்வாய்கள் மற்றும் நீர் வெளியேற்றும் கால்வாய்கள், மதகுகள், தூர்வாரும் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி ஏரி கரைகள் பலப்படுத்தப்பட்டு வருகிறது. ஏரியில் ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் தாங்களாகவே முன்வந்து அரசுக்கு சொந்தமான நிலங்களை ஒப்படைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரசன்னவெங்கடேசன், அன்சர்பாஷா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி, சித்தார்த்தன், ஒன்றிய பொறியாளர்கள் செல்வம், ஆசைத்தம்பி, பணி மேற்பார்வையாளர் கோமதி, கிராம நிர்வாக அலுவலர்கள், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Next Story