மணல் கடத்தலை தடுக்க இஸ்ரோ உதவியுடன் நடவடிக்கை; மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் பேட்டி


மணல் கடத்தலை தடுக்க இஸ்ரோ உதவியுடன் நடவடிக்கை; மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் பேட்டி
x
தினத்தந்தி 25 Aug 2019 4:15 AM IST (Updated: 25 Aug 2019 1:40 AM IST)
t-max-icont-min-icon

மணல் கடத்தலை தடுக்க இஸ்ரோ உதவியுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவையில் மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.

துடியலூர்,

கோவையை அடுத்த ஆனைக்கட்டி சலீம் அலி பறவைகள் மையத்தில் புதிய ஆராய்ச்சி கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இதை மத்திய சுற்றுச்சூழல், வனம், காலநிலை மாற்றம் மற்றும் தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் நேற்று திறந்து வைத்தார். அதன்பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

வனப்பகுதிகளை ஒட்டி இருக்கும் பகுதிகளில் கனிம வளங்கள் சுரண்டப்படுவது மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது. மணல் மற்றும் கனிம வளங்கள் கடத்தப்படுவதை தடுக்க இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) உதவி நாடப்படும். இதற்காக இஸ்ரோவின் செயற்கைக்கோள் வரைப்படத்தின் மூலம் மணல் மற்றும் கனிம வளங்கள் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் மணல் கொள்ளை தடுக்கப்படும். இதேபோல வனவிலங்குகள் மற்றும் மனித மோதலை தடுப்பதற்கும் இஸ்ரோவின் உதவி கேட்கப்படும். வனவிலங்குகள் குடியிருப்புகளுக்குள் ஊடுருவதை கண்காணிக்கவும் இஸ்ரோவின் தொழில்நுட்ப உதவி பயன்படுத்தப் படும்.

காட்டு யானைகளுக்கு தேவையான தண்ணீர் மற்றும் தீவனம் ஆகியவை கிடைக்காதவரை அவை ஊருக்குள் தொடர்ந்து ஊடுருவிக் கொண்டு தான் இருக்கும். இது தொடர்பாக விவசாயிகள் என்னிடம் முறையிட்டனர். இந்த ஆண்டு முதல் அனைத்து மாநிலங்களும் காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக வனவிலங்குகளுக்கு தேவையான தண்ணீர் மற்றும் தீவனங்களை வனப்பகுதிக்குள்ளேயே கிடைக்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட் டுள்ளது.

வனப்பகுதியை ஒட்டி உள்ள பகுதிகளில் தண்ணீர் மற்றும் தீவனச்செடிகளை வளர்க்க நிதி வழங்கப்பட உள்ளது. இந்த நிதி கடந்த 15 ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ளது. அது இந்த ஆண்டு முதல் வழங்கப்படும். வனப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளினால் மனித-வனவிலங்குகள் மோதல் நடந்து கொண்டு உள்ளன. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மலைபாதுகாப்பு ஆணையத்தின் சட்டங்கள் சரியான முறையில் பின்பற்றாததால் தான் காட்டு யானைகளின் வழித்தடங்களில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன.

இந்தியர்கள் இயற்கையை நேசிக்கக்கூடியவர்கள். ஆனால் அந்த இயற்கைக்கு அச்சுறுத்தல்கள் உள்ளன. இந்தியாவில் முன்பு 4 கோடி கழுகுகள் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது ஆயிரம் கழுகுகள் தான் இருப்பதாக தெரியவந்துள்ளது. கழுகுகளின் எண்ணிக்கை குறைந்ததற்கான காரணம் குறித்து ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதில் கவனம் செலுத்தவும், தீர்வு காணும் வழிமுறைகளுக்கு அரசு உதவும். அழியும் தருவாயில் உள்ள உயிரினங்களை மீட்டெடுக்க பல மாற்றங்கள் கொண்டு வரப்பட உள்ளது. இதற்கான ஆராய்ச்சிகளை ஊக்குவிக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும்.

புலிகளின் எண்ணிக்கை வருகிற 2022-ம் ஆண்டுக்குள் இரண்டு மடங்காக்கப்படும். இன்னும் 10 ஆண்டுகளில் அது மேலும் இரண்டு மடங்காகும். இந்தியாவில் 30 ஆயிரம் காட்டு யானைகள் இருப்பதாகவும் ஆயிரக்கணக்கான காண்டாமிருகங்கள் இருப்பதாகவும் கணக்கிடப்பட்டுள்ளன. தற்போது பறவைகள் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே ஏற்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக சலீம் அலி ஆராய்ச்சி மைய மாணவர்களுடன் மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கலந்துரையாடினார்.

இந்த நிகழ்ச்சியில் சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மைய இயக்குனர் சங்கர் மற்றும் முன்னாள் கயிறு வாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் விஞ்ஞானிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story