காவிரி ஆற்றில் அனுமதிக்கப்பட்டதை விட அதிக மணல் எடுக்கப்படுகிறது-நாமக்கல்லில் ஈ.ஆர்.ஈஸ்வரன் பேட்டி


காவிரி ஆற்றில் அனுமதிக்கப்பட்டதை விட அதிக மணல் எடுக்கப்படுகிறது-நாமக்கல்லில் ஈ.ஆர்.ஈஸ்வரன் பேட்டி
x
தினத்தந்தி 24 Aug 2019 11:30 PM GMT (Updated: 24 Aug 2019 8:18 PM GMT)

காவிரி ஆற்றில் அனுமதிக்கப்பட்டதை விட அதிகமாக மணல் எடுக்கப்படுவதாகவும், அதை தடுத்து நிறுத்த அரசு முயற்சி செய்யவேண்டும் எனவும் நாமக்கல்லில் ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறினார்.

நாமக்கல்,

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் நாமக்கல் சட்டமன்ற தொகுதி வளர்ச்சி பணிக்குழுவின் ஆலோசனை கூட்டம் நேற்று நாமக்கல்லில் நடந்தது. கூட்டத்திற்கு கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.எஸ்.ஆர்.துரை முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், கொங்கு வேளாளர் கவுண்டர் பேரவையின் தலைவர் ஆர்.தேவராசன், நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.பி.சின்ராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு பேசினர்.

இதில் நாமக்கல் சட்டமன்ற தொகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சிப்பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் நாமக்கல் சட்டமன்ற தொகுதிக்கு என வளர்ச்சி பணிக்குழு அமைக்கப்பட்டது. தொடர்ந்து நாமக்கல் எம்.பி. ஏ.கே.பி.சின்ராஜின் சம்பளத்தை பொதுநலனுக்காக அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியும் நடந்தது.

இதில் கொங்குநாடு மக்கள் தேசிய அறக்கட்டளைக்கு ரூ.2 லட்சத்திற்கான காசோலையை ஏ.கே.பி.சின்ராஜ் எம்.பி. வழங்கினார்.

பின்னர் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியின் வளர்ச்சி பணிக்காக ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் 60 பேர் கொண்ட குழுவை அமைக்கும் பணி நடந்து வருகிறது. கோவை, ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களை பிரிக்கவேண்டும். கொங்கு மாவட்ட அமைச்சர்களும், மக்கள் பிரதிநிதிகளும் அதற்கு உறுதுணையாக இருக்க வேண்டுமே தவிர குதர்க்கமாக பேசக்கூடாது.

லாரியில் மணல் திருட்டு நடைபெறுவதாக அந்தந்த பகுதி மக்கள் சின்ராஜ் எம்.பி.யிடம் தொடர்ந்து மனு கொடுக்கின்றனர். அந்த கருத்தை நாடாளுமன்ற உறுப்பினர் அமைச்சரிடம் கூறும்போது எதிர்ப்பு கிளம்புகிறது என்றால் சாதாரண மக்கள் அமைச்சரிடம் கூறமுடியுமா?. அதை சரிசெய்ய உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். யாரையும் குறைகூறும் எண்ணம் எங்களுக்கு இல்லை.

காவிரி ஆற்றில் மணலை மாட்டு வண்டியில் எடுக்க அனுமதி பெறுகிறார்கள். ஆனால் அனுமதிக்கப்பட்டதை விட அதிகமாக மணல் எடுக்கப்படுகிறது. அதை தடுத்து நிறுத்த அரசு முயற்சி செய்யவேண்டும்.

இவ்வாறு ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறினார்.

கூட்டத்தில் மாநில விவசாய அணி துணைச்செயலாளர் சந்திரசேகர், மாவட்ட பொருளாளர் ஆர்.எஸ்.ஆர்.மணி, மாவட்ட தலைவர் அசோகன், நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கத்தலைவர் வாங்கிலி உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட துணைச்செயலாளர் ராஜசேகர் நன்றி கூறினார்.

Next Story