கெங்கவல்லி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்


கெங்கவல்லி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 24 Aug 2019 11:00 PM GMT (Updated: 24 Aug 2019 8:18 PM GMT)

கெங்கவல்லி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கெங்கவல்லி,

கெங்கவல்லி அருகே தெடாவூர் பேரூராட்சிக்குட்பட்ட 11-வது வார்டு பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மேட்டூர் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் 10 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 15 நாட்களாக இந்த பகுதியில் முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இது குறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் மனுக்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. இதனால் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமம் அடைந்து வந்தனர்.

இந்த நிலையில் குடிநீர் கேட்டு 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலிக்குடங்களுடன் தெடாவூரில், திருச்சி-ஆத்தூர் நெடுஞ்சாலையில் நேற்று திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த கெங்கவல்லி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன், கிராம நிர்வாக அலுவலர் அசோக் மற்றும் போலீசார் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.அப்போது தெடாவூர் பகுதிக்கு விரைவில் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதன் காரணமாக அந்த பகுதியில் காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story