தமிழகத்தில் செப்டம்பர் 24-ந் தேதி முதல் கறவை மாடுகளுடன் பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்-மாநில கூட்டத்தில் தீர்மானம்


தமிழகத்தில் செப்டம்பர் 24-ந் தேதி முதல் கறவை மாடுகளுடன் பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்-மாநில கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 25 Aug 2019 4:15 AM IST (Updated: 25 Aug 2019 1:49 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற செப்டம்பர் 24-ந் தேதி முதல் 3 நாட்கள் கறவை மாடுகளுடன் போராட்டத்தில் ஈடுபடுவது என நாமக்கல்லில் நடந்த பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மாநில கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாமக்கல்,

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நாமக்கல்லில் நடைபெற்றது. மாநில தலைவர் முனுசாமி தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் முகமதுஅலி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு தீர்மானங்களை விளக்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தற்போது பால் விலை உயர்வு பால் உற்பத்தியாளர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. 2014-ம் ஆண்டுக்கு பின் கடந்த 4 ஆண்டுகளில் பால் கொள்முதல் விலை உயர்வை தமிழக அரசு அறிவிக்கவில்லை. இக்காலத்தில் கால்நடை தீவனங்கள் விலை உயர்வு 50 சதவீதத்துக்கும் மேலாக உயர்ந்துள்ளது. எனவே பசும்பாலுக்கு ஒரு லிட்டருக்கு ரூ.28-ல் இருந்து ரூ.40 எனவும், எருமை பாலுக்கு ஒரு லிட்டருக்கு ரூ.35-ல் இருந்து ரூ.50 எனவும் கொள்முதல் விலையை உயர்த்த கேட்டு போராடி வருகிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய, மாநில அரசுகள் அறிவிப்பதைபோல, பாலுக்கும் தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப கொள்முதல் விலை உயர்வை அறிவிக்கவேண்டும். ஆவின் நிர்வாகம் ஆரம்ப சங்கங்களுக்கு சுமார் ரூ.200 கோடி வரை 50 நாட்கள் வரை பால் பணம் பாக்கி வைத்துள்ளதை உடனடியாக வழங்கவேண்டும்.

தமிழகத்தில் பால் கூட்டுறவு அமைப்புகளை பாதுகாப்பதற்கு தமிழக அரசு கால்நடை துறையின் மூலமாக 50 சதவீத மானிய விலையில் பால் உற்பத்தியாளர்களுக்கு கால்நடை தீவனங்கள் வழங்கவேண்டும். தனியார் நிர்வாகங்கள் பால் கலப்படம் செய்வதை கடுமையான சட்டங்கள் மூலம் தடுக்கவேண்டும்.

தனியார் கொள்முதல் செய்கிற பாலுக்கு அரசு அறிவித்த கொள்முதல் விலையை விட குறைவாக கொடுப்பதை அரசு அனுமதிக்கக்கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற செப்டம்பர் மாதம் 24-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை 3 நாட்கள் தமிழகம் முழுவதும் ஆவின் அலுவலகங்கள், அரசு அலுவலகங்கள், ஆரம்ப சங்கங்கள் ஆகியவற்றின் முன்பாக கறவை மாடுகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாநில பொருளாளர் சங்கர், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பெருமாள், பால் உற்பத்தியாளர் சங்க மாவட்ட தலைவர் முத்துசாமி, மாவட்ட செயலாளர் பூபதி உள்பட தமிழகம் முழுவதும் உள்ள நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story