சேலத்தில் ரேஷன் அரிசி கடத்திய சரக்கு ஆட்டோ டிரைவர் கைது


சேலத்தில் ரேஷன் அரிசி கடத்திய சரக்கு ஆட்டோ டிரைவர் கைது
x
தினத்தந்தி 25 Aug 2019 4:15 AM IST (Updated: 25 Aug 2019 1:49 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் ரேஷன் அரிசி கடத்திய சரக்கு ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

சேலம்,

சேலம் அரிசிபாளையம் பகுதியில் இருந்து சேலம் லீ பஜார் வழியாக சரக்கு ஆட்டோவில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக அந்த பகுதி வாலிபர்களுக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த ஆட்டோவை வாலிபர்கள் சிலர் மடக்கினர். பின்னர் ஆட்டோவை சோதனை செய்த போது அதில் ரேஷன் அரிசி, கோதுமை, மக்காச்சோளம் உள்ளிட்டவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண்குமார் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் சரக்கு ஆட்டோவை ஓட்டி வந்த டிரைவரான அரிசிபாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சிவா (வயது 37) என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், சிவா அரிசிபாளையம் பகுதியை சேர்ந்த சிலரிடம் ரேஷன் அரிசியை வாங்கி, அதனுடன் கடையில் வாங்கப்பட்ட கோதுமை, மக்காச்சோளம் ஆகியவற்றை சேர்த்து மாட்டு தீவனத்திற்காக அரைக்க கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து ரேஷன் அரிசி கடத்தியதாக டிரைவர் சிவாவை போலீசார் கைது செய்தனர்.

மேலும் 15 மூட்டைகளில் இருந்த 450 கிலோ ரேஷன் அரிசி மற்றும் சரக்கு ஆட்டோ ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. கோதுமை, மக்காச்சோளம் கடையில் வாங்கப்பட்டதால் அவற்றை போலீசார் பறிமுதல் செய்யவில்லை. மேலும் ரேஷன் அரிசி கடத்தலில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story