பண பரிமாற்ற நிறுவனத்தில் ரூ.35 ஆயிரம் கைவரிசை: சென்னையில், ஈரானிய கொள்ளையர்கள் 2 பேர் கைது ஒருவர் தப்பி ஓட்டம்


பண பரிமாற்ற நிறுவனத்தில் ரூ.35 ஆயிரம் கைவரிசை: சென்னையில், ஈரானிய கொள்ளையர்கள் 2 பேர் கைது ஒருவர் தப்பி ஓட்டம்
x
தினத்தந்தி 26 Aug 2019 5:00 AM IST (Updated: 25 Aug 2019 11:16 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் பண பரிமாற்ற நிறுவனத்தில் ரூ.35 ஆயிரம் கைவரிசை காட்டிய ஈரானிய கொள்ளையர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை,

சென்னை ஆயிரம்விளக்கு மாடல் பள்ளி சாலையில், டிராவல்ஸ் மற்றும் பண பரிமாற்றம் நிறுவனம் நடத்தி வருபவர் ஜெயின்ஷா(வயது 38). இவருடைய நிறுவனத்துக்கு கடந்த 21-ந்தேதி வெளிநாட்டு வாலிபர்கள் 2 பேர் வந்தனர்.

அவர்கள் வெளிநாட்டு பணத்துக்கு இந்திய ரூபாய் மதிப்பு எவ்வளவு என்பது குறித்து விவரங்களை கேட்டு சென்றனர். அவர்கள் சென்ற சிறிது நேரத்தில், நிறுவனத்தில் வைக்கப்பட்டிருந்த ரூ.35 ஆயிரம் மாயமாகி இருந்ததை கண்டு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக கடையில் பொறுத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காட்சிகளை அவர்கள் ஆய்வு செய்தனர். அப்போது அந்த வெளிநாட்டு வாலிபர்கள் 2 பேரும் ஊழியர்களின் கவனத்தை திசை திருப்பி ரூ.35 ஆயிரத்தை திருடிச் சென்றது பதிவாகி இருந்தது. இதுதொடர்பாக ஜெயின்ஷா ஆயிரம் விளக்கு போலீஸ்நிலையத்தில் புகார் கொடுத்தார்.

மேலும் இந்த வீடியோ காட்சியை ‘வாட்ஸ்-அப்’ மூலமாக டிராவல்ஸ் நிறுவனம் மற்றும் பண பரிமாற்ற நிறுவனம் நடத்தி வரும் தனது நண்பர்களுக்கு ஜெயின்ஷா அனுப்பி வைத்து, அவர்களை உஷார்படுத்தினார்.

இந்தநிலையில் ஆயிரம் விளக்கில் உள்ள மற்றொரு நிறுவனத்துக்கு 3 வாலிபர்கள் வந்தனர். அமெரிக்கா டாலர்களை மாற்ற வேண்டும் என்று கூறினர். அவர்களுடைய நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அந்த நிறுவனத்தின் உரிமையாளர், ஜெயின்ஷா அனுப்பிய ‘வாட்ஸ்-அப்’ வீடியோவை பார்த்தார். அதில் 2 பேர் ஜெயின்ஷா நிறுவனத்தில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள் என்பது தெரிய வந்தது.

உடனடியாக அவர் இதுகுறித்து ஜெயின்ஷாவுக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்தார். இதுபற்றி ஜெயின்ஷா ஆயிரம் விளக்கு போலீசாருக்கு தெரிவித்தார். இதையடுத்து ஆயிரம் விளக்கு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி தலைமையிலான போலீஸ் படையினர் குறிப்பிட்ட நிறுவனத்துக்கு விரைந்து வந்தனர்.

போலீசார் வருவதை சுதாரித்துக் கொண்ட 3 பேரும் தப்பி ஓட முயன்றனர். இதில் 2 பேர் போலீசார் பிடியில் சிக்கினர். ஒருவன் தப்பி ஓடி விட்டான். பிடிப்பட்ட 2 பேரையும் போலீஸ்நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் ஈரானை சேர்ந்த அமீர் அலி(29), மோகன்இலாகி(29) என்பதும், தப்பி ஓடியவர் பெயர் ஜகாம் என்பதும் தெரிய வந்தது.

இவர்கள் 3 பேரும் ஈரான் நாட்டில் இருந்து விமானம் மூலம் கடந்த மாதம் டெல்லி வந்துள்ளனர். பின்னர் அங்கிருந்து ரெயில் மூலம் சென்னை வந்து, ஓட்டலில் தங்கி திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் வேறு எங்காவது கைவரிசை காட்டி உள்ளனரா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தப்பி ஓடிய ஜகாமை போலீசார் தேடி வருகிறார்கள்.

பொதுமக்கள் கவனத்தை திசை திருப்பி கொள்ளையடிப்பதில் ஈரானிய கொள்ளையர்கள் கைத்தேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story