பயங்கரவாதிகள் ஊடுருவல் எச்சரிக்கை எதிரொலி: அதிவேக ரோந்து கப்பல் மூலம் பாக்ஜலசந்தி கடல் பகுதி கண்காணிப்பு


பயங்கரவாதிகள் ஊடுருவல் எச்சரிக்கை எதிரொலி: அதிவேக ரோந்து கப்பல் மூலம் பாக்ஜலசந்தி கடல் பகுதி கண்காணிப்பு
x
தினத்தந்தி 25 Aug 2019 11:15 PM GMT (Updated: 25 Aug 2019 6:29 PM GMT)

பயங்கரவாதிகள் ஊடுருவல் எச்சரிக்கை எதிரொலியாக பாக்ஜலசந்தி கடல் பகுதி அதிவேக ரோந்து கப்பல் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

ராமேசுவரம்,

இலங்கையில் இருந்து 6 பயங்கரவாதிகள் ஊடுருவியதாக உளவுத்துறை விடுத்த எச்சரிக்கையை தொடர்ந்து ராமேசுவரம் உள்பட ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ள கடல் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேற்று 4-வது நாளாக மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ஹோவர் கிராப்ட் கப்பல் ராமேசுவரம்-தனுஷ்கோடி வரையிலான கடல் பகுதியிலும், மண்டபம் முதல் ராமேசுவரம் வரையிலான கடல் பகுதியில் மற்றொரு ஹோவர் கிராப்ட் கப்பலும் ரோந்து பணியில் ஈடுபட்டன.

இதுதவிர ஆழ்கடல் பகுதியில் சி-431 என்ற அதிவேக ரோந்து கப்பல் பாக்ஜலசந்தி கடல் பகுதியில் சுற்றி வருகிறது. கப்பலில் உள்ள ரேடார் மூலம் தூரத்தில் உள்ள சிறிய மற்றும் பெரிய படகுகளையும் கடலோர காவல் படையினர் கண்காணித்து வருவதுடன், சந்தேகப்படும் படியான நபர்கள், படகுகளை கண்டால் உடனடியாக கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என மீனவர்களிடம் அறிவுறுத்தி வருகின்றனர்.

அது போல் மண்டபம் பருந்து கடற்படை விமான தளத்தில் உள்ள 2 ஹெலிகாப்டர்கள் மூலம் ராமேசுவரம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் கடல், கடற்கரை மற்றும் தீவு பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

Next Story