கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில், முதல் போக நெல் சாகுபடி தொடக்கம்


கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில், முதல் போக நெல் சாகுபடி தொடக்கம்
x
தினத்தந்தி 25 Aug 2019 10:30 PM GMT (Updated: 25 Aug 2019 7:04 PM GMT)

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முதல்போக நெல் சாகுபடி தொடங்கியுள்ளது.

உத்தமபாளையம்,

கம்பம் பள்ளத்தாக்கு பகுதி என்பது லோயர்கேம்ப்பில் இருந்து தொடங்கி பழனிசெட்டிபட்டி வரை உள்ளது. முல்லைப்பெரியாறு பாசனம் மூலம் இரு போக நெல் சாகுபடி நடந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்துப்போனதால் ஒரு போக நெல் சாகுபடி நடந்தது. இந்த ஆண்டு பருவமழை காலதாமதமாக பெய்தது.

இதையடுத்து முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. இதனால் நேற்று முன்தினம் முதல் போக பாசனத்துக்கு முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கூடலூர், கம்பம், சுருளிபட்டி, காமயகவுண்டன்பட்டி, ராயப்பன்பட்டி, உத்தமபாளையம், சின்னமனூர், மார்க்கையன்கோட்டை, குச்சனூர், வீரபாண்டி உள்ளிட்ட பகுதிகளில் முதல் போக நெல் சாகுபடிக்கு நாற்றங்கால் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

மேலும் சிலர் ஏற்கனவே ஆழ்துளை கிணறு மூலம் நாற்றங்கால் அமைத்திருந்தனர். தற்போது வாய்க்கால்களில் தண்ணீர் திறக்கப்பட்டதால் முதல்போக நெல் சாகுபடி பணி தொடங்கியுள்ளது.

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியை பொறுத்தவரை பல ஆண்டுகளாக ஜூன் முதல் தேதியில் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் கடந்த 2 வருடங்களாக தாமதமாகவே பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் குறுகியகால நெல் பயிர்களை தேர்வு செய்து விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர். மேலும் வேளாண் அதிகாரிகளும் நேரடியாக வந்து விவசாயிகளுக்கு முதல் போக சாகுபடிக்கான தொழில் நுட்பங்கள் குறித்து ஆலோசனை வழங்கி வருகின்றனர்.


Next Story