2 வயது குழந்தைக்கு சூடு வைத்த வழக்கில் கைது செய்யப்பட்ட தாய், கள்ளக்காதலன் குண்டர் சட்டத்தில் ஜெயிலில் அடைப்பு
வேலூரில் 2 வயது பெண் குழந்தையின் உடலில் சூடு வைத்து, சித்ரவதை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட குழந்தையின் தாய் மற்றும் கள்ளக்காதலன் குண்டர் சட்டத்தில் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
வேலூர்,
வேலூர் தொரப்பாடியைச் சேர்ந்த 2 வயது பெண் குழந்தை கடந்த ஜூலை மாதம் 26-ந்தேதி உடல்நலக்குறைவால் வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டாள். குழந்தையின் உடல் முழுவதும் சூடு வைத்த தழும்புகளும், பிறப்புறுப்பில் காயங்களும் காணப்பட்டன.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த டாக்டர்கள் இதுகுறித்து வேலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நிஷாந்தினிக்கு தகவல் தெரிவித்தனர். அவர், நேரில் வந்து பெண் குழந்தையைப் பார்த்து, விசாரணை நடத்தினார். அந்தப் பெண் குழந்தை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதும், சிகரெட்டால் உடல் முழுவதும் சூடு வைக்கப்பட்டு, சித்ரவதைச் செய்யப்பட்டுள்ளதும் தெரிய வந்தது.
இதையடுத்து நிஷாந்தினி, வேலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் புனிதா வழக்குப்பதிந்து விசாரித்தார். அதில், 2 வயது குழந்தையை தாயின் கள்ளக்காதலனான திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தை சேர்ந்த பெயிண்டர் அருண் உதயகுமார் (வயது 28) சிகரெட்டால் சூடு வைத்து சித்ரவதைப்படுத்தி, பாலியல் துன்புறுத்தல் செய்ததும், அதற்கு உடந்தையாக தாய் இருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து 2 பேரும் கைது செய்யப்பட்டு வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
2 வயது குழந்தையின் உடலில் சூடுவைத்து, பாலியல் துன்புறுத்தல் செய்த அருண் உதயகுமார் மற்றும் உறுதுணையாக இருந்த குழந்தையின் தாயை குண்டர் சட்டத்தில் கைது செய்யும்படி மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரத்துக்கு, போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் பரிந்துரை செய்தார். அதன்படி இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.
அதையடுத்து அதற்கான ஆணையின் நகல் ஜெயிலில் இருக்கும் இருவரிடமும் போலீசார் வழங்கினர்.
Related Tags :
Next Story