12 நாட்களுக்கு பிறகு கடைமடையை எட்டிப்பார்த்த காவிரி நீர் 30 நாட்கள் முறை வைக்காமல் வழங்கப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு


12 நாட்களுக்கு பிறகு கடைமடையை எட்டிப்பார்த்த காவிரி நீர் 30 நாட்கள் முறை வைக்காமல் வழங்கப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 25 Aug 2019 10:30 PM GMT (Updated: 25 Aug 2019 7:26 PM GMT)

12 நாட்களுக்கு பிறகு காவிரிநீர் கடைமடையை எட்டிப்பார்த்தது. 30 நாட்கள் முறை வைக்காமல் வழங்கப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.

சேதுபாவாசத்திரம்,

தஞ்சை மாவட்டத்தின் சேதுபாவாசத்திரம், பள்ளத்தூர், ஆண்டிகாடு, இரண்டாம்புளிக்காடு, நாடியம், குருவிக்கரம்பை, மருங்கப்பள்ளம், துறையூர், மரக்காவலசை, உடையநாடு, வீரியங்கோட்டை, முடச்சிக்காடு, கழனிக்கோட்டை, வாத்தலைக்காடு, பூக்கொல்லை, ரெட்டவயல், கழனிவாசல், முதுகாடு, மணக்காடு உள்ளிட்ட கிராமங்கள் கடைமடை பகுதியாக விளங்குகின்றன.

இங்கு தண்ணீர் பற்றாக்குறையால் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு போக சம்பா நெல் சாகுபடி மட்டுமே நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு (2018) ஜூலை மாதம் 19-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இருப்பினும் கடைமடைக்கு போதுமான தண்ணீர் கிடைக்காமல் சம்பா சாகுபடி முழுமையாக நடைபெறவில்லை.

கடைமடைக்கு வந்தது

இந்த ஆண்டு டெல்டா பாசனத்துக்காக கடந்த 13-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து காவிரி நீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் 12 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் கடைமடையில் உள்ள புதுப்பட்டினம் மற்றும் சேதுபாவாசத்திரம் பகுதி வாய்க்கால்களை வந்தடைந்தது.

கடைமடை பகுதியில் 300-க்கும் மேற்பட்ட ஏரிகள் உள்ளன. இவை அனைத்தும் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக வறண்ட நிலையில் காட்சி அளிக்கின்றன. இந்த ஏரிகள் நிரம்ப வேண்டுமெனில் கடைமடை பகுதிக்கு முழு கொள்ளளவு தண்ணீரை முறை வைக்காமல் 30 நாட்களாவது திறந்து விட வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

நிலத்தடி நீர்மட்டம் உயரும்

கடைமடையில் 3 போக நெல் சாகுபடியையும் மேற்கொள்ள முடியாது. இந்த பருவத்தில் நடைபெறும் ஒரு போக சாகுபடியை மட்டுமே நம்பி உள்ளோம். ஆனால் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மிகவும் தாமதமாக கிடைப்பதால் ஒரு போக சாகுபடியையும் சிரமமின்றி மேற்கொள்ள முடிவதில்லை.

தற்போது திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் கடைமடைக்கு முறைவைக்காமல் 30 நாட்களாவது வழங்கினால் தான் கடைமடை பகுதியில் உள்ள ஏரிகள் நிரம்பும். இதன் மூலம் நிலத்தடி நீர் மட்டமும் உயர வாய்ப்பு ஏற்படும்.

இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

Next Story