கும்மிடிப்பூண்டி அருகே 2 கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு


கும்மிடிப்பூண்டி அருகே 2 கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு
x
தினத்தந்தி 25 Aug 2019 10:15 PM GMT (Updated: 25 Aug 2019 8:18 PM GMT)

கும்மிடிப்பூண்டி அருகே 2 கடைகளின் பூட்டை உடைத்து மின்வயர்கள் மற்றும் ரொக்கப்பணத்தை திருடிசென்ற மர்ம நபர்களை போலீசார் தனிப்படை அமைத்து தேடிவருகின்றனர்.

கும்மிடிப்பூண்டி, 

கும்மிடிப்பூண்டி பஜாரையொட்டிய உள்ள மிளகாய் செட்டிகுளம் பகுதியில் வசித்து வருபவர் பாபு (வயது 39). இவர் கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூர் பஜாரில் மோட்டார் சைக்கிள் வாகனத்திற்கான உதிரிபாகங்களை விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். நேற்று காலை கடையை திறக்க பாபு சென்றார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கடை திறந்து கிடந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

கடைக்கு உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் ரூ.16 ஆயிரம் ரொக்கப்பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.

அதே போல கும்மிடிப்பூண்டியை சேர்ந்த மோகன்லால் (32) என்பவருக்கு சொந்தமான எலக்ட்ரிக்கல் மற்றும் இரும்புக்கடையின் முன்பக்க பூட்டும் உடைக்கப்பட்டு கடை திறந்து கிடந்தது கண்ட பாபு அவருக்கு தகவல் தெரிவித்தார்.

இதனையடுத்து அந்த கடையின் உரிமையாளரான மோகன்லால் நேரில் வந்து பார்த்தபோது, கடையில் இருந்த ரூ.2½ லட்சம் மதிப்புள்ள மின் வயர்கள் மற்றும் கல்லா பெட்டியை திறந்து அதில் இருந்த ரூ.10 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.

ஒரே நாள் இரவில் ஆள்நடமாட்டம் உள்ள பகுதியில் அடுத்தடுத்து 2 கடைகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் நள்ளிரவில் சந்தேகத்திற்கு இடமான வகையில் மேற்கண்ட 2 கடைகளின் முன்பும் கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது குறித்து கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கல்பனா தத் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ஜெயகுமார் தலைமையில் ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story