பனமரத்துப்பட்டி ஏரியில் ரூ.13 கோடியில் புனரமைப்பு பணிகள்: கலெக்டர் ராமன் தகவல்


பனமரத்துப்பட்டி ஏரியில் ரூ.13 கோடியில் புனரமைப்பு பணிகள்: கலெக்டர் ராமன் தகவல்
x
தினத்தந்தி 25 Aug 2019 9:30 PM GMT (Updated: 25 Aug 2019 8:18 PM GMT)

பனமரத்துப்பட்டி ஏரியில் ரூ.13 கோடியில் புனரமைப்பு பணிகள் விரைவில் நடைபெறும் என்று கலெக்டர் ராமன் தெரிவித்தார்.

பனமரத்துப்பட்டி, 

சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டியில் மாநகராட்சிக்கு சொந்தமான சுமார் 2,400 ஏக்கர் பரப்பளவில் பனமரத்துப்பட்டி ஏரி உள்ளது. இந்த ஏரி கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. இந்த ஏரியில் உள்ள சீமைக்கருவேல மரங்கள் மற்றும் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரியும், மேட்டூர் உபரிநீரை இந்த ஏரிக்கு கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சரிடம் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.

இந்தநிலையில் பனமரத்துப்பட்டி ஏரியை மாவட்ட கலெக்டர் ராமன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் ஏரியின் நீர்த்தேக்க பகுதிகளை பார்வையிட்டார். பின்னர் ஏரியில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது குறித்தும், ஏரிக்கு தண்ணீர் வராததற்கான காரணம் குறித்தும், நீர்வரத்து பகுதியில் அமைக்கப்பட்ட தடுப்பணைகளை அகற்றுவது குறித்தும் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆய்வின்போது கலெக்டரிடம் விவசாயிகள் மனு கொடுத்தனர். அதில், பனமரத்துப்பட்டி பேரூராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள இந்த ஏரியை பனமரத்துப்பட்டி பேரூராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும். ஏரியில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து பனமரத்துப்பட்டியில் உள்ள ரேஷன் கடையில் கலெக்டர் ராமன் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மாநகராட்சி ஆணையாளர் சதீஷ், தாசில்தார் மாதேஸ்வரன், பொதுப்பணித்துறை நீர்வள ஆதார கோட்ட பொறியாளர் கவுதமன், பனமரத்துப்பட்டி வருவாய் ஆய்வாளர் சங்கீதா, பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன், பேரூராட்சி முன்னாள் தலைவர் பாலச்சந்திரன், அ.தி.மு.க. நகர செயலாளர் சின்னதம்பி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து கலெக்டர் ராமன் திருமணிமுத்தாறு அணைமேடு செங்கல் அணை, குமரகிரி ஏரி உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் இதுகுறித்து அவர் கூறும் போது, சேலம் மாவட்டத்தில் இந்த ஆண்டு குடிமராமத்து திட்டம் மூலம் ரூ.5 கோடியே 63 லட்சம் மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட குமரகிரி ஏரி சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் ரூ.31 கோடி மதிப்பீட்டில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் புனரமைக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளது. மேலும் பனமரத்துப்பட்டி ஏரியில் ரூ.12 கோடியே 99 லட்சம் மதிப்பில் புனரமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது, என்றார்.

Next Story