2-ம் நிலை காவலர் பணியிடங்களுக்கான தேர்வு: திருச்சியில் 8 ஆயிரத்து 757 பேர் எழுதினர்


2-ம் நிலை காவலர் பணியிடங்களுக்கான தேர்வு: திருச்சியில் 8 ஆயிரத்து 757 பேர் எழுதினர்
x
தினத்தந்தி 25 Aug 2019 11:00 PM GMT (Updated: 25 Aug 2019 8:20 PM GMT)

2-ம் நிலை காவலர் பணியிடங்களுக்கான தேர்வை திருச்சியில் 8 ஆயிரத்து 757 பேர் எழுதினர்.

திருச்சி,

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் 2-ம் நிலை காவலர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு மாநிலம் முழுவதும் நேற்று நடந்தது. இத்தேர்வுக்காக திருச்சியில் பஞ்சப்பூர் சாரநாதன் என்ஜினீயரிங் கல்லூரி, ஜமால் முகமது கல்லூரி உள்பட 9 இடங்களில் மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த தேர்வை எழுத விண்ணப்பித்திருந்தவர்களில் 10 ஆயிரத்து 615 பேருக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.தேர்வை எழுதுவதற்காக தேர்வர்கள் நேற்று காலையிலேயே தேர்வு மையங்கள் முன்பு குவிந்தனர். தேர்வு மையத்தில் ஆண், தேர்வர்களை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சோதனை செய்து, நுழைவுச்சீட்டுகளை சரிபார்த்து அனுப்பினர். செல்போன், பர்ஸ் உள்பட எலக்ட்ரானிக் பொருட் கள் எதுவும் தேர்வு மையத்தின் உள்ளே கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை.

கமிஷனர் ஆய்வு

இதனால் தேர்வர்கள் கொண்டு வந்திருந்த செல்போன் மற்றும் உடைமைகளை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பெற்று அதனை தனியாக அடுக்கி வைத்து டோக்கன் வழங்கினர். காலை 10 மணிக்கு பின் வந்தவர்களை தேர்வு மையத்தின் உள்ளே போலீசார் அனுமதிக்கவில்லை. தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி பகல் 11.20 மணிக்கு முடிவடைந்தது.

திருச்சி மாவட்டத்தில் இந்த தேர்வை மொத்தம் 8 ஆயிரத்து 757 பேர் எழுதினர். ஆயிரத்து 858 பேர் தேர்வு எழுதவரவில்லை. தேர்வு நடைபெற்றதை மையங்களில் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் ஆய்வு மேற்கொண்டார். தேர்வு நடந்த மையங்கள் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தேர்வர்களுடன் வந்தவர்கள் தேர்வு மையங்களின் வெளியே அவர்கள் வரும் வரை காத்திருந்தனர்.

Next Story