மதுரை அருகே பரபரப்பு: தியேட்டரில் தீ விபத்து; ரசிகர்கள் ஓட்டம்


மதுரை அருகே பரபரப்பு: தியேட்டரில் தீ விபத்து; ரசிகர்கள் ஓட்டம்
x
தினத்தந்தி 26 Aug 2019 4:30 AM IST (Updated: 26 Aug 2019 1:52 AM IST)
t-max-icont-min-icon

மதுரை அருகே சினிமா தியேட்டரில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இதனால் ரசிகர்கள் ஓட்டம் பிடித்தனர்.

மேலூர்,

மதுரை அருகே 3 தியேட்டர்களுடன் கூடிய வளாகத்தின் தரைத்தளத்தில் 2 தியேட்டர்களும், 2-வது தளத்தில் குளிர்சாதன வசதியுடன் கூடிய தியேட்டரும் உள்ளன. முதல் தளத்தில் கடைகள் உள்ளன.

நேற்று பகல் காட்சி 3 தியேட்டர்களிலும் ஓடிக்கொண்டு இருந்தது. இந்த நிலையில் சினிமா இடைவேளையின் போது, அந்த தியேட்டரில் கடைகள் செயல்படும் முதல் தளத்தில் திடீரென கரும்புகை வந்தது. அப்போது கடைகளில் நின்றிருந்த ரசிகர்கள் அலறினார்கள். மேலும் 2-வது தளத்தில் இருந்த ரசிகர்களும் கீழே இறங்கி ஓடிவந்தனர்.

குளிர்சாதன கருவிகளுக்கான மின்சப்ளை செய்யும் அறையில் தீப்பிடித்து, அந்த அறையில் கிடந்த பழைய இருக்கைகள் மற்றும் சில பொருட்கள் எரிந்து கொண்டிருந்தது தெரியவந்தது.

உடனே ஊழியர்கள் 3 தியேட்டர்களிலும் காட்சிகளை நிறுத்திவிட்டு, அனைத்து அவசர வழிகளையும் திறந்துவிட்டனர். இதையடுத்து ரசிகர்கள் வெளியே ஓடிவந்தனர்.

இதையடுத்து அங்கிருந்த தீயணைக்கும் கருவிகளை வைத்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தீ கட்டுக்குள் வரவில்லை.

இதற்கிடையே தகவல் அறிந்து தீயணைப்பு படையினர், விரைந்து வந்து தியேட்டரில் எரிந்த தீயை அணைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் விசாரித்தனர். முதல்கட்ட விசாரணையில், தியேட்டரின் முதல் தளத்தில் மின்சாதன பொருட்களில் மின்கசிவு ஏற்பட்டதால் இந்த தீவிபத்து ஏற்பட்டது தெரியவந்தது.

இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

தீவிபத்தை தொடர்ந்து சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டு அந்தந்த காட்சிக்குரிய பணத்தை ரசிகர்களிடம் தியேட்டர் நிர்வாகம் திரும்ப வழங்கியது.

Next Story