முக்கூடல் பீடித்தொழிலாளர் மருத்துவமனையை விரிவுபடுத்த வேண்டும் மத்திய மந்திரியிடம், ஞானதிரவியம் எம்.பி. வலியுறுத்தல்


முக்கூடல் பீடித்தொழிலாளர் மருத்துவமனையை விரிவுபடுத்த வேண்டும் மத்திய மந்திரியிடம், ஞானதிரவியம் எம்.பி. வலியுறுத்தல்
x
தினத்தந்தி 25 Aug 2019 10:15 PM GMT (Updated: 25 Aug 2019 8:32 PM GMT)

முக்கூடல் பீடித்தொழிலாளர் மருத்துவமனையை விரிவுபடுத்த வேண்டும் என மத்திய மந்திரியிடம், ஞானதிரவியம் எம்.பி. வலியுறுத்தினார்.

நெல்லை,

முக்கூடல் பீடித்தொழிலாளர் மருத்துவமனையை விரிவுபடுத்த வேண்டும் என மத்திய மந்திரியிடம், ஞானதிரவியம் எம்.பி. வலியுறுத்தினார்.

இதுதொடர்பாக டெல்லியில் மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி சந்தோஷ் குமார் கங்க்வாரை ஞானதிரவியம் எம்.பி. நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

6 லட்சம் பீடித்தொழிலாளர்கள்

எனது நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாளையங்கோட்டை, மேலப்பாளையம், முக்கூடல், ஆலங்குளம், அம்பாசமுத்திரம், கூடங்குளம் உள்பட பல்வேறு பகுதிகளில் சுமார் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட பீடித்தொழிலாளர்கள் உள்ளனர். அவர்கள் பயன்பெறும் வகையில் தான் முக்கூடலில் பீடித்தொழிலாளர் நல மருத்துவமனை 2007-2008 -ல் தொடங்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாக மருத்துவமனை செயல்படாமல் இருந்து வந்தது. 2017-ல் ஒரு புதிய ஆணையர் நிரந்தரமாக நியமித்த பின்னர் தற்போது முக்கூடல் பீடித்தொழிலாளர் மருத்துவமனை செயல்பட தொடங்கியுள்ளது. இங்கு ஆரம்பத்தில் 32 படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டு, 24 மணி நேரம் சேவை தொடர்ந்து வந்தது. தற்போது 8 மணி நேரம் மட்டுமே செயல்படுகிறது. அங்கு வெளி நோயாளிகள் வந்து சிகிச்சை பெறும் வகையில் மட்டுமே மருத்துவமனை இயங்கி வருகிறது.

விரிவுபடுத்த வேண்டும்

மருத்துவமனைக்கு 8 செவிலியர்கள், 8 மருந்தாளுநர்கள், மகப்பேறு மருத்துவர், பல்நோக்கு பணியாளர்கள், சமையலர்கள், ஓட்டுனர்கள், எக்ஸ்ரே படம் எடுப்பவர் ஆகிய அலுவலர்கள் நியமிக்கப்படாமல் இருந்து வருகிறது. மேலும் மருத்துவமனையை சீரமைக்க ரூ.2 கோடியே 18 லட்சத்தை ஒதுக்கீடு செய்யக்கோரி மத்திய தொழிலாளர் நலத்துறைக்கு கடந்த பிப்ரவரி மாதம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த தொகைகூட இதுவரை அளிக்கப்படவில்லை.

நெல்லையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மத்திய அரசின் அலுவலகத்துக்கு நிரந்தர கட்டிடம் எதுவுமின்றி தற்போது வரை வாடகை கட்டிடத்திலேயே இயங்கி வருகிறது. இது மிகவும் வேதனைக்குரியது. நெல்லை மாவட்டத்தில் மட்டும் ஆண்டுதோறும் பீடித்தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு ரூ.6 கோடிக்கு மேல் உதவித்தொகை வழங்கப்படு கிறது. எனவே நெல்லை மற்றும் புதுச்சேரி மண்டலம் செயல்படும் நெல்லை அலுவலகத்துக்கு கட்டிடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்க வேண்டும். முக்கூடல் பீடித்தொழிலாளர் நல மருத்துவமனையை ஒரு முன்னோடி மருத்துவமனையாக தரம் உயர்த்தி விரிவுபடுத்த வேண்டும். இதனால் சுமார் 6 லட்சம் பீடித்தொழிலாளர்கள் பயன்பெறுவதுடன், மற்ற பொதுமக்களும் பயன் பெறுவார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story