கர்நாடகத்தில் போலீஸ் எச்சரிக்கை: குழந்தை கடத்தல் குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை
கர்நாடகத்தில் குழந்தை கடத்தல் குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் குழந்தை கடத்தல் குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
குழந்தை கடத்தல் வதந்தி
கர்நாடகம் உள்பட நாடு முழுவதும் கடந்த ஆண்டு குழந்தை கடத்தும் கும்பல் பற்றிய வதந்திகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவின. அதாவது வியாபாரிகள் போன்று தெருவில் சுற்றும் நபர்கள் பச்சிளம் குழந்தைகளை கடத்தி செல்கிறார்கள். இதனால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று பல்வேறு தகவல்கள் பரவின. இதை உண்மை என்று நம்பிய பலர் சந்தேகப்படும் படியாக தெருவில் சுற்றிய அப்பாவிகளை பிடித்து சரமாரியாக தாக்கினர். இதில் பலர் உயிரிழந்தனர். கர்நாடகத்திலும் பெங்களூரு உள்பட சில இடங்களில் பொதுமக்கள் தாக்கியதில் சிலர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில், தற்போது கர்நாடகத்தில் மீண்டும் குழந்தை கடத்தும் கும்பல் பற்றிய செய்திகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. குறுஞ்செய்தியாகவும், குரல்பதிவாகவும் இந்த பதிவுகள் பரப்பப்படுகின்றன. அவற்றில், ‘பாய், கம்பளி உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்பவர்கள் போல் தெருவில் சுற்றும் நபர்கள் வீடுகளை நோட்டமிடுவார்கள். பிறகு யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் இருக்கும் குழந்தைகளையும், சிறுவர்-சிறுமிகளையும் கடத்திச் சென்று விடுவார்கள். இதனால் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும்“ என்பது உள்பட பல்வேறு விவரங்கள் இடம் பெற்றுள்ளன.
கடும் நடவடிக்கை
இதுபற்றி உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால், கடந்த ஆண்டை போன்று உயிரிழப்பு சம்பவங்கள் நடக்காமல் தடுக்க போலீஸ் துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. மேலும் சமூக வலைத்தளங்களில் குழந்தை கடத்தல் கும்பல் பற்றி வதந்திகளை பரப்பி பொதுமக்களை அச்சமடைய செய்யும் நபர்களை உளவுத்துறை கண்காணித்து வருகிறது. மேலும் இதுபற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று ஒவ்வொரு போலீஸ் நிலைய அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் பகல், இரவு நேரங்களில் ஒவ்வொரு போலீஸ் நிலையத்தை சேர்ந்த 2 போலீஸ்காரர்கள் தங்களது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ரோந்து பணியில் சென்று பொதுமக்களுடன் நேரடி தொடர்பில் இருக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து உளவுத்துறை கூடுதல் டி.ஜி.பி. கமல்பந்த் கூறுகையில், ‘சமூக வலைத் தளங்களில் குழந்தை கடத்தல் குறித்து வதந்தி பரப்பும் நபர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உள்ளோம். இதுதொடர்பாக அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மேலும் பொதுமக்களிடம் விழிப் புணர்வு ஏற்படுத்தவும் அறிவுரை வழங்கி உள்ளோம்’ என்றார்.
Related Tags :
Next Story