ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற, அரசு ஊழியர்களை பழிவாங்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும்
ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற அரசு ஊழியர்களை பழிவாங்கும் நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும் என்று பட்டதாரி ஆசிரியர் கழக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் மாநில தலைவர் மகேந்திரன் வலியுறுத்தினார்.
திண்டுக்கல்,
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் சிறப்பு பொதுக்குழு கூட்டம் திண்டுக்கல்லில் நடந்தது. இதற்கு கழகத்தின் மாவட்ட தலைவர் ராஜாக்கிளி தலைமை தாங்கினார். செயலாளர் சந்திரசேகரன் அனைவரையும் வரவேற்றார். மாநில துணை தலைவர் காஜாமைதீன் முன்னிலை வகித்தார். செய்தி மக்கள் தொடர்பாளர் அருணாச்சலநாதன் கழகத்தின் வரவு-செலவு அறிக்கையை வாசித்தார். மாநில தலைவர் மகேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் பிரச்சினைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதற்காக ஜாக்டோ-ஜியோ அமைப்பு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. இதன் ஒரு கட்டமாக நடத்தப்பட்ட போராட்டத்தில் பங்கேற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அரசு நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுத்துள்ளது.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை பழிவாங்கும் விதமாக எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும். அத்துடன் பள்ளிக்கல்வித்துறையில் பிற துறையின் தலையீடு இருக்கக்கூடாது. அதாவது, ஆய்வு என்ற பெயரில் பிற துறைகளை சேர்ந்த அதிகாரிகள் ஆசிரியர்களுக்கு நெருக்கடி கொடுப்பதை தடுக்க வேண்டும். அதேபோல் எம்.பில். படிப்புகளுக்கான முன் அனுமதிக்காக நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரே அனுமதி அளிக்க அரசு அதிகாரம் வழங்க வேண்டும். அப்போது தான் மாணவர்களின் படிப்பு பாதிக்காது.
இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில், உபரி பணியிடம் என காரணம் காட்டி ஆசிரியர்களை பணியிட மாற்றம் செய்வதை கல்வித்துறை அதிகாரிகள் தவிர்க்க வேண்டும். பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு அகமதிப்பீடு உள்ளதை போல் 10-ம் வகுப்புக்கும் அகமதிப்பீடு வழங்க வேண்டும். அரசு பள்ளி மாணவர்களுக்கு காலதாமதம் இன்றி உதவித்தொகை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் சுந்தரமூர்த்தி, பொருளாளர் ஜான்பால் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story