தேனி நாடாளுமன்ற தொகுதியை, இந்தியாவிலேயே முன்னோடி தொகுதியாக மாற்ற நடவடிக்கை - ரவீந்திரநாத்குமார் எம்.பி. பேச்சு
தேனி நாடாளுமன்ற தொகுதியை இந்தியாவிலேயே முன்னோடி தொகுதியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ரவீந்திரநாத்குமார் எம்.பி. கூறினார்.
போடி,
தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஏற்பாட்டின்பேரில், ஸ்ரீகுரு தட்சிணாமூர்த்தி அறக்கட்டளை, திண்ணை மனிதவள மேம்பாட்டுக்கழகம் இணைந்து போடி ஜ.கா.நி. மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு கடந்த ஒரு மாதமாக நடந்து வந்தது. இந்த பயிற்சி வகுப்பு நிறைவு நாள் நிகழ்ச்சி நேற்றுமுன்தினம் நடந்தது.
இதற்கு ஸ்ரீகுருதட்சிணாமூர்த்தி அறக்கட்டளை கவுரவ தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். தேனி திண்ணை மனிதவள மேம்பாட்டு கழக ஒருங்கிணைப்பாளர் செந்தில் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் மாதிரி தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தேனி எம்.பி. ஓ.ப.ரவீந்திரநாத்குமார் பரிசுகள், சான்றிதழ்களை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்த இலவச பயிற்சி வகுப்பு நிறைவு பெற்றுவிட்டது என நினைத்து வீட்டிற்கு சென்றதும் வீட்டு பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் கவனத்தை திசை திருப்பி விடாதீர்கள். உங்கள் நோக்கம் அரசு பணியாளர் தேர்வில் வெற்றி பெறுவது. எனவே குறிக்கோளில் வெற்றி பெறும் வரை கவனம் சிதறாமல் உழைக்க வேண்டும்.
தேனி நாடாளுமன்ற தொகுதியை இந்தியாவிலேயே முன்னோடி தொகுதியாக மாற்றுவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக தேனி நாடாளுமன்ற தொகுதி வளர்ச்சிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சி வாரியாகவும் துணைக்குழுக்கள் அமைக்கப்பட இருக்கிறது.
இந்த குழுவின் மூலம் தொலைநோக்கு பார்வையுடன் பல்வேறு பணிகள் நடைபெற உள்ளது. இதில் தன்னார்வமுள்ள அனைவரும் உறுப்பினராக பங்கேற்று தொகுதி வளர்ச்சிக்கு கருத்துகளை தெரிவிக்கலாம். இதற்காக தனியாக இணையதளம் மற்றும் கைபேசி செயலி உருவாக்கப்படும்.
அதன்மூலம் மக்கள் பிரச்சினைகளை யார் வேண்டுமானாலும் புகைப்படம் மூலம் பதிவேற்றம் செய்தால் அது எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டு உடனுக்குடன் தீர்க்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் துணை முதல்-அமைச்சரின் முதுநிலை நேர்முக உதவியாளர் கண்ணன், போடி எம்.எல்.ஏ. அலுவலக நேர்முக உதவியாளர் ராஜா அழகணன், போடி நகர அ.தி.மு.க. செயலாளர் பழனிராஜ், ஜ.கா.நி. மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராமசுப்பிரமணி மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story