அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து - விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தர்ணா
வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து தேனியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி,
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் நேற்று முன்தினம் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டது. இந்த சம்பவத்தை கண்டித்து சாலை மறியல் செய்ய தேனி நேரு சிலை சிக்னல் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று காலை குவிந்தனர். இதனால், அங்கு 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.
மறியல் செய்ய திட்டமிட்ட கட்சி நிர்வாகிகளிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திக் கொள்ள சாலையின் ஓரத்தில் ஒரு பகுதியை போலீசார் ஒதுக்கிக் கொடுத்தனர். அங்கு மாவட்ட செயலாளர்கள் நாகரத்தினம், சுருளி ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பின்னர் அவர்கள் அங்கேயே அமர்ந்து தர்ணாபோராட்டம் செய்தனர்.
இதில் தேனி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தமிழ்வாணன், செங்கதிர் இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் பா.சி.முத்துக்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர். அம்பேத்கர் சிலையை உடைத்தவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
தர்ணா போராட்டத்தை தொடர்ந்து கட்சியினர் திடீரென சாலை மறியல் செய்ய முயன்றனர். எனவே அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்வதற்காக வேனில் ஏற்றினர். பின்னர் சிறிது நேரத்தில் அவர்களை கைது செய்யாமல் போலீசார் வேனில் இருந்து கீழே இறக்கிவிட்டனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
வேதாரண்யத்தில் அம்பேத்கரின் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து கம்பம் போக்குவரத்து சிக்னல் அருகே தமிழ்புலிகள் அமைப்பின் நகர செயலாளர் திருநாவுக்கரசு தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உடனே சம்பவ இடத்திற்கு கம்பம் தெற்கு போலீசார் விரைந்து வந்து தமிழ்புலிகள் அமைப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story