காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள அனந்தசரஸ் குளத்தை பார்வையிட குவியும் பக்தர்கள்


காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள அனந்தசரஸ் குளத்தை பார்வையிட குவியும் பக்தர்கள்
x
தினத்தந்தி 26 Aug 2019 10:30 PM GMT (Updated: 26 Aug 2019 5:32 PM GMT)

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வளாகத்தில் உள்ள அனந்தசரஸ் குளத்தில் அத்திவரதர் சயன கோலத்தில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தொடர்விடுமுறையையொட்டி, குளத்தை பார்வையிட ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சியளிக்கும் அத்திவரதர் பெருவிழா கடந்த ஜூலை 1-ந் தேதி தொடங்கி ஆகஸ்டு 17-ந் தேதி வரை தொடர்ந்து 48 நாட்கள் நடைபெற்றது. இதில், அத்திவரதரை தரிசிக்க தினமும் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். இதையடுத்து விழா நிறைவு பெற்றதையொட்டி, அத்திவரதர் கோவில் வளாகத்தில் உள்ள அனந்தசரஸ் குளத்தில் உள்ள மண்டபத்திற்கு அடியில் ஆகஸ்டு 17-ந் தேதி அத்திவரதர் சயனகோலத்தில் வைக்கப்பட்டார். இந்நிலையில் விழா முடிந்து ஒரு வாரத்திற்கு மேல் ஆன பிறகு தினமும் அத்திவரதர் வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளத்தை காண ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். மேலும் கடந்த வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என தொடர் விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

அத்திவரதர் பெருவிழா நடைபெற்றபோது, கூட்ட நெரிசல் காரணமாகவும், இட நெருக்கடி காரணமாகவும் கோவிலில் மூலவர் வரதராஜ பெருமாளை தரிசிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதிக்கவில்லை. தற்போது அத்திவரதர் வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளம் மற்றும் மூலவரை தரிசிக்க அனுமதி அளிக்கப்பட்டதை அடுத்து, ஆந்திரா, கர்நாடகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பலர் குவிந்த வண்ணம் உள்ளனர்.

இதைத்தொடர்ந்து மூலவர் வரதராஜ பெருமாளை தரிசிக்க பக்தர்கள் நீண்ட நேரம் வரை காத்திருந்தனர். கடந்த சில நாட்கள் பெய்த தொடர் மழையால் குழாய் மூலம் தண்ணீர் நிரம்பி வருவதால் அனந்தசரஸ் குளத்தில் 3 அடி அளவுக்கு தண்ணீர் நிரம்பி உள்ளது.

Next Story