காவிரி உள்பட நதிநீர் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க எடியூரப்பா தலைமையில் மந்திரிசபை துணை குழு


காவிரி உள்பட நதிநீர் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க எடியூரப்பா தலைமையில் மந்திரிசபை துணை குழு
x
தினத்தந்தி 27 Aug 2019 4:45 AM IST (Updated: 27 Aug 2019 12:34 AM IST)
t-max-icont-min-icon

காவிரி உள்பட நதிநீர் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் மந்திரிசபை துணை குழு அமைக்க மந்திரிசபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு,

கர்நாடக மந்திரிசபை கூட்டம் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இதில் மந்திரிகள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மந்திரிகள் மாதுசாமி, பசவராஜ் பொம்மை ஆகியோர் கூட்டாக நிருபர்களிடம் கூறியதாவது:-

கர்நாடகத்தில் அதிகளவில் பெய்த மழையால் வெள்ளப்பெருக்கு உண்டாகி பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. நிலச்சரிவால் ஏற்பட்டுள்ள பாதிப்பு மற்றும் பள்ளிகள் மூடப்பட்டிருப்பது குறித்து மந்திரிசபை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க உத்தரவிடப்பட்டது. அதன்படி 1.32 லட்சம் பேருக்கு நிவாரண தொகை வழங்கப்பட்டு உள்ளது. நிவாரண முகாம் களில் இருந்தவர்களுக்கு மட்டும் இந்த நிவாரணம் வழங்க முன்பு முடிவு செய்யப்பட்டது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உறவினர், நண்பர்களின் வீடுகளில் தஞ்சமடைந்த மக்களுக்கும் நிவாரண தொகையை வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

முழுமையாக சேதம் அடைந்த வீடுகளுக்கு மாற்றாக ரூ.5 லட்சம் செலவில் புதிய வீடு கட்டி கொடுக்கப்படும். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் நிலம், வனப்பகுதி, கட்டிடங்கள் நாசம் அடைந்துள்ளது. பழைய மைசூரு, மடிகேரி பகுதிகளில் காபி தோட்டங்கள் பெரிதும் சேதம் அடைந்துள்ளன. புதிய தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதிய பங்களிப்பை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. அதே போல் மாநில அரசும், அரசு ஊழியர்களின் ஓய்வூதியத்திற்கு தனது பங்கை 10 சதவீதத்தில் இருந்து 14 சதவீதமாக உயர்த்த முடிவு செய்துள்ளது.

தாவணகெரே மாவட்டத்தில் 53 ஏரிகளில் தண்ணீர் நிரப்ப முடிவு செய்யப்பட்டு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. இதற்கு ரூ.663 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டது. இதையடுத்து அந்த திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. இப்போது மாநில அரசு இந்த திட்டத்தை இரு கட்டமாக செயல்படுத்த முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக ரூ.250 கோடியில் இந்த திட்டம் அமல்படுத்தப்படும். ஏரிகளில் தண்ணீர் நிரப்பும் திட்டத்தை அமல்படுத்த ஓய்வுபெற்ற புவியியல் வல்லுனர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. மகதாயி, காவிரி, கிருஷ்ணா நதிநீர் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருக்கின்றன.

முன்பு இருந்த அரசு தீவிரமாக செயல்பட்டு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யவில்லை. காவிரி உள்பட அனைத்து நதி நீர் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் மந்திரிசபை துணை குழு அமைக்க முடிவு செய்யப்பட்டு, இதில் மந்திரிகள் பசவராஜ் பொம்மை, கோவிந்த் கார்ஜோள், ஆர்.அசோக் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். நன்னடத்தை அடிப்படையில் 10 ஆண்டுகள் தண்டனையை அனுபவித்த ஆயுள் தண்டனை கைதிகள் 139 பேரை விடுதலை செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story