தடை செய்யப்பட்ட பொருட்களால் ஆன விநாயகர் சிலைகளை விற்பவர்கள் மீது நடவடிக்கை கலெக்டரிடம் மனு


தடை செய்யப்பட்ட பொருட்களால் ஆன விநாயகர் சிலைகளை விற்பவர்கள் மீது நடவடிக்கை கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 27 Aug 2019 4:30 AM IST (Updated: 27 Aug 2019 12:56 AM IST)
t-max-icont-min-icon

தடை செய்யப்பட்ட பொருட்களால் ஆன விநாயகர் சிலைகளை விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் உமா மகேஸ்வரி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். கூட்டத்தில் புதுக்கோட்டை அருகே உள்ள அரசநாயகிபுரம், புலிவலம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், நாங்கள் அரசநாயகிபுரத்தில் சுமார் ஆயிரம் வீடுகளை கட்டி, அதில் பல கிராமங்களை சேர்ந்த மக்கள் வசித்து வருகிறோம். நாங்கள் முறையாக ஊராட்சிக்கு வீட்டுவரி, குடிநீர் கட்டணம் செலுத்தி வருகிறோம். மேலும் வீடுகளுக்கு மின் இணைப்பு பெற்று, மின் கட்டணம் செலுத்தி வருகிறோம்.

இந்நிலையில் தேக்காட்டூர் கிராமத்தை சேர்ந்த சிலர் எங்கள் பகுதியில் உள்ள சில வீடுகளை இடித்தும், சில வீடுகளை சேதப்படுத்திவிட்டு, அனைவரும் வீட்டுமனை பகுதியை மட்டும் வைத்துக்கொண்டு மீதமுள்ள இடங்களை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும். இல்லையென்றால் வீடுகளை இடித்துவிட்டு, உங்களை விரட்டி விடுவோம் என மிரட்டி வருகின்றனர். எனவே இது குறித்து கலெக்டர் நடவடிக்கை எடுத்து எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கூறியிருந்தனர்.

குடிநீர் கட்டணம்

தி.மு.க. நகர செயலாளர் கட்சி நிர்வாகிகளுடன் கொடுத்த மனுவில், புதுக்கோட்டை நகராட்சி நிர்வாகத்தின் சார்பில், புறநகர் பகுதிகளாக 1, 2, 3, 41 மற்றும் 42 வார்டுகளுக்கு மாதம் 2 முறை அல்லது 3 முறை மட்டுமே காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் ஒரு குடம் குடிநீரை ரூ.6 கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். எனவே உரிய நடவடிக்கை எடுத்து குடிநீர் முறையாக வழங்க வழிவகை செய்ய வேண்டும். மேலும் குடிநீர் வழங்க முடியாத இப்பகுதி மக்களுக்கு குடிநீர் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என கூறியிருந்தனர்.

3 குழந்தைகளுடன் வந்த தம்பதி

குளத்தூர் தாலுகா பள்ளிக்கொண்டான்பட்டி கிராமத்தை சேர்ந்த பழனியாண்டி, நாகம்மாள் தம்பதியினர் ஒரே பிரசவத்தில் பிறந்த 3 குழந்தைகளுடன் வந்து கொடுத்த மனுவில், எங்களுக்கு திருமணமாகி ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ளனர். தற்போது எங்களுக்கு ஒரே பிரசவத்தில் 2 ஆண் குழந்தைகள், ஒரு பெண் குழந்தை என 3 குழந்தைகள் பிறந்துள்ளது. இதனால் எங்களுக்கு குழந்தை உதவிதொகை வழங்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறியிருந்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர், சமூகநலத்துறை அலுவலர்களை அழைத்து, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில மகளிர் சங்க செயலாளர் காயத்ரி குமரேசன் கொடுத்த மனுவில், புதுக்கோட்டை கீழராஜவீதி, கீழ 2-ம் வீதி, வடக்கு, தெற்கு மற்றும் மேலராஜவீதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள், பொதுமக்கள் நடைபாதைகள் மற்றும் நகராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்து, பொதுமக்களுக்கு இடையூறு செய்து வருகின்றனர். எனவே நடைபாதை, நகராட்சிக்கு சொந்தமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் எனக்கூறியிருந்தார்.

தடை செய்யப்பட்ட பொருட்களால் ஆன விநாயகர்

இந்து முன்னணி சார்பில், நிர்வாகி நமாராஜா கொடுத்த மனுவில், தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்து முன்னணியின் பெயரை கெடுக்கும் வகையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பொருட்களால் விநாயகர் சிலைகள் தயார் செய்யப்பட்டு, அவை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த விநாயகர் சிலையை நீர்நிலைகளில் கரைப்பதால் நீரில் உள்ள உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே தடை செய்யப்பட்ட பொருட்களால் தயார் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அந்த சிலை ஊர்வலத்தில் கலந்து கொள்ள தடைவிதிக்க வேண்டும் என கூறியிருந்தார்.

Next Story