30 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட திட்டம்: காவிரியில் இருந்து உப்பாறு நீர்த்தேக்கத்திற்கு கிளை வாய்க்கால் கலெக்டரிடம் மனு


30 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட திட்டம்: காவிரியில் இருந்து உப்பாறு நீர்த்தேக்கத்திற்கு கிளை வாய்க்கால் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 27 Aug 2019 4:30 AM IST (Updated: 27 Aug 2019 1:24 AM IST)
t-max-icont-min-icon

30 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட திட்டமான காவிரியில் இருந்து உப்பாறு நீர்த்தேக்கத்திற்கு கிளை வாய்க்கால் அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

திருச்சி,

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கலெக்டர் எஸ்.சிவராசு மனுக்களை பெற்று அவற்றை அதிகாரிகளின் நடவடிக்கைக்கு உத்தரவிட்டார். மண்ணச்சநல்லூர் அருகே உள்ள வீராணி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் காவிரி உப்பாறு நீர்த்தேக்க இணைப்பு- கூட்டு இயக்க நிர்வாகி கணேசன் தலைமையில் திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர்.

பின்னர் அவர்கள், கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கிடப்பில் போடப்பட்ட திட்டம்

மண்ணச்சநல்லூர் தாலுகா சிறுப்பத்தூர் ஊராட்சியில் 1980-ம் ஆண்டில் அன்றைய முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். உத்தரவின்பேரில் சிறுப்பத்தூர் உப்பாறு நீர்த்தேக்கம் கட்டப்பட்டது. 1955, 2006-ம் ஆண்டுகளில் நீர்த்தேக்கம் நிரம்பி வழிந்தது. அதன் பிறகு இதுநாள்வரை கடுமையான வறட்சி காரணமாக நீர்நிலை வறண்டு காணப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு 1980-ம் ஆண்டில் பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு(அரியார் வடிநில கோட்டம், மன்னார்புரம்) செயற்பொறியாளரால் அறிக்கை தயாரிக்கப்பட்டு இதுநாள் வரை அதாவது 30 ஆண்டுகளுக்கும் மேலாக இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை மீண்டும் செயல்படுத்தினால் புலிவலம் ஏரி, பெரமங்கலம் ஏரி, சிறுப்பத்தூர் உப்பாறு நீர்த்தேக்கம் ஆகிய நீர் நிலைகளும் நிரம்பி 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் உயரும். இதனால் குடிநீர், விவசாயம், நீர் மேலாண்மை பாதுகாக்கப்படும். எனவே, காவிரியில் இருந்து உப்பாறு நீர்த்தேக்கத்திற்கு கிளை வாய்க்கால் அமைத்து கடலில் கலக்கும் உபரிநீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற வேண்டும்

திருச்சி லால்குடி பெரிய செட்டித்தெருவை சேர்ந்த வைரமணி தலைமையில் ஆறுமுகம், சந்திரா, செல்வி, மலர்விழி, மேகவள்ளி உள்ளிட்ட திரளான பெண்கள் திரண்டு வந்து குறைதீர்க்கும் கூட்டத்தில் கொடுத்துள்ள மனுவில், லால்குடி பேரூராட்சிக்குட்பட்ட ரெயில்வே மேம்பாலத்தின் பக்கவாட்டில் 2 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. பஸ் நிலையம், பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு செல்லும் வழியில் இந்த மதுக்கடைகள் உள்ளது. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், பஸ் நிலையம் செல்லும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். எனவே, அந்த 2 டாஸ்மாக் மதுக்கடைகளையும் அங்கிருந்து அகற்றி ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் அமைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.

கழிவுநீர் தொட்டியை அகற்றிட வேண்டும்

திருச்சி காட்டூர் 63-வது வார்டு ராஜராஜேஸ்வரி நகரை சேர்ந்த குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் கொடுத்த மனுவில், பொன்மலை கோட்டம் 63-வது வார்டு ராஜராஜேஸ்வரி நகர் மற்றும் அதை சுற்றி 1000 குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் பாதாள சாக்கடை கழிவுநீர் தேக்க தொட்டிகள் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சத்தில் உள்ளனர். மேலும் 50 அடி தூரத்தில் பள்ளி ஒன்றும் உள்ளது. ஏற்கனவே, அந்த இடம் பொதுமக்கள், சிறுவர்கள் பயன்பெறும் பூங்கா அமைப்பதற்காக ஒதுக்கப்பட்டதாகும். எனவே, பாதாள சாக்கடை கழிவுநீர் தேக்க தொட்டிகள் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைவிடத்தை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏ.

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏ. கலெக்டர் சிவராசுவை சந்தித்து கொடுத்துள்ள மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

துவாக்குடியில் உள்ள தேசிய தொழில்நுட்ப கழகத்தின்(என்.ஐ.டி.) வழியாக பொதுமக்கள் 50 ஆண்டு களாக பயன்படுத்தி வந்த பாதையை தற்போது என்.ஐ.டி. மூடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக பொதுமக்கள் தரப்பில் என்னிடம் தெரிவிக்கப்பட்டது. இதனால், அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாவார்கள். வார்டு எண்:29-ல் அண்ணாநகரில் இருந்து திருச்சி-தஞ்சை செல்லும் பாதை குண்டும், குழியுமாக உள்ளது. தென்னக ரெயில்வேக்கு சொந்தமான இடத்தை ரெயில்வே நிர்வாகம் கேட்ட தொகையை கொடுத்து விட்டு, சாலையை சீரமைக்க வேண்டும். பர்மா காலனியில் வசிக்கும் மக்களை ரெயில்வே நிர்வாகம் காலி செய்திட வற்புறுத்தி வருகிறது. எனவே, அதே பகுதியில் அம்மக்கள் வசிக்க பட்டா வழங்கிட வேண்டும். மேலும் 61-வது வார்டு அண்ணாநகரில் உள்ள எம்.ஜி.ஆர்.சாலையை சீரமைக்க வேண்டும். 29-வது வார்டில் அரியமங்கலம் பாலத்தின்கீழ் உள்ள அணுகுசாலையில் அமைக்கப்பட்டுள்ள மின் விளக்குகள் பல மாதங்களாக எரிவதில்லை. அதை ஒளிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story