தூத்துக்குடி மாவட்டத்தில் கல்வி டி.வி. ஒளிபரப்பு தொடக்கம்: 87 அரசு பள்ளி மாணவர்கள் உற்சாகம்


தூத்துக்குடி மாவட்டத்தில் கல்வி டி.வி. ஒளிபரப்பு தொடக்கம்: 87 அரசு பள்ளி மாணவர்கள் உற்சாகம்
x
தினத்தந்தி 27 Aug 2019 4:15 AM IST (Updated: 27 Aug 2019 1:59 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் நேற்று தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் கல்வி டி.வி. ஒளிபரப்பப்பட்டது. மாவட்டத்திலுள்ள 87 அரசு பள்ளி மாணவர்கள் டி.வி. நிகழ்ச்சிகளை உற்சாகமாக கண்டுகளித்தனர்.

தூத்துக்குடி, 

தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவ, மாணவிகள் கல்வி திறனை வளர்க்கும் வகையில் கல்வி டி.வி. ஒளிபரப்பு நேற்று தொடங்கப்பட்டது. மாவட்டத்தில் உள்ள 87 அரசு பள்ளிகளில் நேற்று இந்த டி.வி. நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு தொடங்கப்பட்டது. நேற்று இந்த டி.வி.யில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளை மாணவர்கள் உற்சாகமாக கண்டுகளித்தனர். இதனை தூத்துக்குடி சி.வ.அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி, மாவட்ட கல்வி அலுவலர் மாரியப்பன், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சீனி, உதவி திட்ட அலுவலர் சுப்பிரமணியன், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். .

பின்னர் கலெக்டர் சந்தீப் நந்தூரி நிருபர்களிடம் கூறியதாவது:- தூத்துக்குடி மாவட்டத்தில் 87 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதற்காக அரசு கேபிள் டி.வி. மூலம் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஏற்கனவே செட்டாப் பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது. இந்த நிகழ்ச்சிகள் காலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரை ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இதனால் மாணவ, மாணவிகளின் கல்வி ஆற்றல் அதிகரிக்கும்.

கல்வி மட்டுமின்றி பொழுதுபோக்கு அம்சங்களும் நிறைந்து உள்ளன. 87 பள்ளிக்கூடங்களிலும் கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்புவதற்கான காலஅட்டவணையும் தயார் செய்யப்பட்டு உள்ளது. இந்த தொலைக்காட்சியை மாணவ, மாணவிகள் பார்த்து பயன்பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story