குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் வந்ததால் பரபரப்பு: கலெக்டர் அலுவலகத்தை பெண்கள் முற்றுகை
குடிநீர் கேட்டு நெல்லை கலெக்டர் அலுவலகத்தை பெண்கள் காலிக்குடங்களுடன் நேற்று முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை,
நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வளர்ச்சி மன்ற கூட்டரங்கத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார்.
நெல்லையை அடுத்த மானூரை சேர்ந்த பொதுமக்கள் திரளாக வந்து, கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், “மனூர் தாலுகாவில் பள்ளமடை குளம், மானூர் பெரியகுளம் உள்ளது. இந்த குளங்கள் மூலம் சுமார் 8 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசனம் பெறுகின்றன. கால்வாய் வரும் வழியில் சீமை கருவேல மரங்கள் அதிகமாக வளர்ந்து காணப்படுகிறது. இதனால் மழை காலங்களில் குளத்துக்கு தண்ணீர் சரியாக வருவது இல்லை. அதனால் சீமை கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கூறப்பட்டுள்ளது.
அதே கிராமத்தை சேர்ந்த மக்கள் கொடுத்த மற்றொரு மனுவில், “பல்லிக்கோட்டை கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்“ என்று கூறப்பட்டிருந்தது.
நெல்லை மாநகர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் கரிசல் சுரேஷ் தலைமையில் அந்த கட்சியை சேர்ந்த எம்.சி.கார்த்திக், நடராஜன், வேலாயுதம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகம் நுழைவு வாயில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பின்னர் அவர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில், “நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலையை சில சமூக விரோதிகள் உடைத்துள்ளனர். இந்த சம்பவத்துக்கு காரணமானவர்களை கைது செய்து, அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்“ என்று கூறப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் காசிவிசுவநாதன் தலைமையில் புளியங்குடியை சேர்ந்த காட்டு நாயக்கர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அவர்களுடன் பள்ளி மாணவ-மாணவிகளும் சீருடையில் வந்து இருந்தனர். ஊர் பொதுமக்கள் சார்பில் கலெக்டர் ஷில்பாவிடம் கொடுக்கப்பட்ட மனுவில், “காட்டு நாயக்கர் சமுதாயத்தை சேர்ந்த எங்களுக்கு சாதி சான்றிதழ் கிடைக்கவில்லை. பலமுறை மனு கொடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் எங்கள் குழந்தைகளுக்கு உயர் கல்வி கிடைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எங்களுக்கு காட்டு நாயக்கர் சாதி சான்றிதழ் வழங்க உத்தர விட வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.
முதியோர் உதவி தொகை கேட்டு, கீழப்பாவூரை சேர்ந்த முதியோர்கள் மனு கொடுக்க திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
சங்கரன்கோவில் தாலுகா துரைச்சாமிபுரத்தை சேர்ந்த பெண்கள் காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அவர்கள் நுழைவு வாயிலில் முற்றுகை போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ஊர் பொதுமக்கள் சார்பில் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில், “எங்கள் ஊரில் சுமார் 100 குடும்பங்கள் உள்ளன. எங்கள் கிராமத்துக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வருவதற்காக கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்த அரசு உத்தரவிட்டு உள்ளது. இந்த திட்டத்தில் குடிநீர் குழாய்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த திட்டம் நிறைவேற்றப்படாததால் எங்கள் கிராமத்துக்கு தண்ணீர் கிடைக்கவில்லை. எங்கள் ஊரில் நிலத்தடி நீரும் சரியாக கிடைப்பது இல்லை. ஆழ்குழாய் கிணறு மூலம் தண்ணீர் கிடைக்கவில்லை. 6 மாதங்களாக சரியாக குடிநீர் கிடைக்கவில்லை. எங்கள் கிராமத்துக்கு சீரான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு விவசாய சங்கம் பாளையங்கோட்டை தாலுகா சார்பில் கலெக்டரிடம் கொடுக்கப்பட்ட மனுவில், “நெல்லையில் இருந்து நாகர்கோவில் வரை இரட்டை ரெயில் பாதை திட்டத்துக் காக விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகின்றன. நிலத்துக்கான இழப்பீடு எதுவும் வழங்கவில்லை. ரெயில்பாதை திட்டத்துக்காக விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும்“ என்று கூறப்பட்டு இருந்தது.
மானூர் அருகே உள்ள ரஸ்தாவை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், “ரஸ்தா வழியாக செல்லும் அனைத்து விரைவு பஸ்களும் நின்று செல்ல வேண்டும்“ என்று கூறப்பட்டுள்ளது.
நெல்லையில் இருந்து தாழையூத்து வழியாக மதவக்குறிச்சிக்கு அரசு பஸ்கள் இயக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கொடுத்த மனுவில், “அனைத்து வணிக நிறுவனங்களிலும் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.
நெல்லை மாநகர் மாவட்ட தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் கண்மணி மாவீரன், தென்காசி மாவட்ட தலைவர் நாகராஜ பாண்டியன் உள்ளிட்டோர் கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், “சிவகிரி தாலுகா நெல்கட்டும்செவல் பூலித்தேவன் மணிமண்டபத்தில் உள்ள கல்வெட்டு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புரனமைக்கப்பட்டது. அதில், தேவேந்திரகுல வேளாளர் இனத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் வெண்ணிக்காலாடி தேவேந்திரரை, வெண்ணிக்காலாடி பகடை என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. இதை மாற்றி புதிய கல்வெட்டு வைக்க வேண்டும்“ என்று கூறப்பட்டு இருந்தது. மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி புதிய தமிழகம், தேவேந்திர குல மள்ளர் தொழில் வர்த்தக சபை சார்பிலும் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.
நெல்லை மாவட்ட தமிழர் விடுதலை களம் செயலாளர் முத்துக்குமார் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், “நெல்லை மாநகராட்சி 55-வது வார்டு பகுதியில் பராமரிப்பு இல்லாமல் இருக்கும் கழிவறைகளை சரி செய்ய வேண்டும். ரெங்கநாதபுரம், நதிப்புரம், இலந்தகுளம் ஆகிய பகுதிகளில் சுகாதார வளாக வசதி, சீரான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story