குமாரபாளையம் அருகே, சாயஆலை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு - கலெக்டரிடம் மனு


குமாரபாளையம் அருகே, சாயஆலை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு - கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 27 Aug 2019 3:30 AM IST (Updated: 27 Aug 2019 2:01 AM IST)
t-max-icont-min-icon

குமாரபாளையம் அருகே சாயஆலை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

நாமக்கல், 

குமாரபாளையம் அருகே உள்ள அருவங்காடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் நேற்று சாய ஆலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை மனு ஒன்றை கலெக்டர் ஆசியா மரியத்திடம் கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:- அருவங்காடு மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களில் 500 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகிறோம். இந்த நிலையில் இப்பகுதியில் குமாரபாளையம் அருகே அமானி கிராமத்தில் சுமார் 28 ஏக்கர் நிலத்தில் பெரிய சாய ஆலை அமைக்க உள்ளதாக தெரிய வருகிறது. இந்த நிலங்களில் இலவச மின் இணைப்புகளுடன் கூடிய கிணறுகள் உள்ளன. மேலும் பொதுமக்கள் பயன்படுத்த கூடிய கிணறுகளும் உள்ளன.

இப்பகுதியில் சாய ஆலை அமைத்தால் பொதுமக்களுக்கு கொடிய தோல் சம்பந்தப்பட்ட வியாதிகளும், சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களும் ஏற்படும் அபாயமும் உள்ளது. குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் ஆழ்துளை கிணறுகளும், விவசாய கிணறுகளும் மாசுபட வாய்ப்பு உள்ளது.

இப்பகுதியில் விவசாயத்தை நம்பியும், கால்நடை வளர்ப்பை நம்பியும் மட்டுமே பொதுமக்கள் உள்ளதால், குடும்ப வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கும். எனவே குமாரபாளையம் அருகே உள்ள அமானி கிராமத்தில் சாய ஆலை அமைப்பதற்கு அனுமதிக்க கூடாது.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.

Next Story